மான் கி பாத் 77வது உரை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தொற்றுநோய் காலத்தில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை 10 மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மான் கி பாத் (மனதின் குரல் ) என்கிற வானொலி நிகழ்ச்சியில் இன்று (மே 30) பேசிய பிரதமர் மோடி, “இந்தியா சாதாரண காலங்களில், ஒரு நாளில் 900 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது. இப்போது, அந்த எண்ணிக்கை, தற்போது கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் வாயுவை வழங்க ஒவ்வொரு நாளும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்டி சுமார் 9,500 மெட்ரிக் டன் வரை உயர்ந்துள்ளது.”என்று கூறினார்.
நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2 லட்சம் புதிய கோவிட் -19 தொற்றுகளையும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கோவிட் -19 இன் இரண்டாவது அலைக்கு எதிராக போராடும் போது மகத்தான உறுதியை வெளிப்படுத்தியதற்காக நாட்டு மக்களைப் பாராட்டினார். இந்த தொற்று நோய், 100 ஆண்டுகளில் மிக மோசமானது. அதை எதிர்கொள்ள இந்தியாவின் உறுதி எப்போதும் மிக அதிகமாக உள்ளது. நாட்டின் கூட்டு வலிமையும், நம்முடைய சேவை உணர்வும் அனைத்து நெருக்கடிகளிலும் நாடு உறுதியுடன் இருக்க உதவியது” என்று கூறினார்.
ஒரே மாதத்தில் நாட்டை தாக்கிய இரண்டு புயல்களால் (தாக்தே மற்றும் யாஸ்) பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்களையும் பிரதமர் பாராட்டினார். அம்மாநில மக்களின் தைரியம், பொறுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தினார்கள் என்று கூறினார். “நான் அனைத்து குடிமக்களையும் மரியாதையுடனும் முழு மனதுடனும் மதிக்கிறேன்” என்று பிரதமர் மோடி தனது மான் கி பாத் உரையின் போது கூறினார்.
“தாமாக முன்வந்து நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதுகூட குறைவாகத்தான் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழப்பை சந்தித்த மக்களுடன் நாம் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம்”என்று பிரதமர் மோடி கூறினார்.
என்.டி.ஏ அரசாங்கம் 7 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “இப்போது இந்தியா மற்ற நாடுகளின் விருப்பங்களின்படியும் அழுத்தங்களின்படியும் செயல்படாது என்பதைக் காண்கிறோம். ஆனால் அதன் தீர்மானத்தின்படி செயல்படும் என்பதால் நாம் பெருமிதம் கொள்கிறோம். அவர் மேலும் கூறுகையில், பல ஆண்டுகளாக, நாடு ‘சப்கா சாத், சபா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற மந்திரத்தை இயக்கி வருகிறது. தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் இந்தியா சமரசம் செய்துகொள்ளபோதும், நமது படைகளின் வலிமை அதிகரிக்கும் போதும், நாம் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறோம்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி, மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியபோது, திரவ ஆக்ஸிஜன் டேங்கர் டிரைவர், ஒரு பெண் ரயில்வே டிரைவர், ஆக்ஸிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள ஒரு விமானப்படை அதிகாரி ஆகியோருடன் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.