மன்மோகன்சிங், ஹமீத் அன்சாரி ஆகியோரின் அர்பணிப்பு குறித்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பவில்லை என நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக’ குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் டெல்லியில் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளை ரகசியமாக சந்தித்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
‘இது பொய்யான புகார்’ என்று அப்போதே குறிப்பிட்ட மன்மோகன்சிங், ‘அரசமைப்பு பதவிகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் ஆபத்தான முன்னுதாரணம் இது’ என்றும் மோடியை விமர்சித்தார். தவிர, பாஜக.வை எதிர்ப்பவர்களை இந்தியாவுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் போக்கை பாஜக கடைபிடிப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன.
நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடர் தொடங்கி ஒரு வாரம் ஆகியும், ‘அந்த விவகாரத்திற்கு மோடி விளக்கம் தெரிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையை முடக்கி வருகின்றனர். இந்தச் சூழலில் இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘பிரதமர் தனது பேச்சில் மன்மோகன்சிங், ஹமீது அன்சாரி ஆகியோரின் அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுப்பவில்லை. அந்த அர்த்தத்திலும் அவர் பேசவில்லை. அப்படி புரிந்து கொண்டிருந்தால், அது தவறானது. இந்த இரு தலைவர்கள் மீதும் நாங்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கிறோம். அவர்கள் இந்த தேசத்திற்கு ஆற்றியிருக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகள் மீது வைத்திருக்கும் மதிப்பைப் போலவே!’ என குறிப்பிட்டார் அருண் ஜெட்லி.
காங்கிரஸ் தரப்பில் குலாம்நபி ஆசாத் இதை வரவேற்று நன்றி தெரிவித்தார். ‘இந்த விளக்கத்திற்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமரின் மதிப்பை குறைக்கும் வகையில் யார் பேசியிருந்தாலும், அதில் காங்கிரஸுக்கு தொடர்பு இல்லை. வருங்காலங்களில் அப்படி பேசப்படுவதை காங்கிரஸ் விரும்பவும் இல்லை’ என மணிசங்கர் அய்யரின் ‘நீச்’ விமர்சனத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் மறைமுகமாக குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டார்.
இதன் மூலமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒரு வாரமாக முடக்கிய விவகாரம் முடிவுக்கு வந்தது. முன்னதாக நாடாளுமன்ற வாயிலில் மன்மோகன்சிங்கும், மோடியும் சந்தித்து நலன் விசாரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.