மோடிக்கு எதிராக பக்கோடா போராட்டம் : பெங்களூரு, உ.பி. என பரவுகிறது

மோடிக்கு எதிராக பக்கோடா போராட்டம் பிரபலமாகி வருகிறது. பட்டமளிப்பு விழா உடை அணிந்து கொண்டு மாணவர்கள் பக்கோடா விற்று பரபரப்பு ஏற்படுத்தினர்.

மோடிக்கு எதிராக பக்கோடா போராட்டம் பிரபலமாகி வருகிறது. பட்டமளிப்பு விழா உடை அணிந்து கொண்டு மாணவர்கள் பக்கோடா விற்று பரபரப்பு ஏற்படுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்று கருத்து தெரித்தார். இது பெரும் சர்ச்சையாகியது.

பிரதமர் மோடி தற்போது சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் பக்கோடா விற்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர்கள் பட்டம் பெறும் போது அணியும் ஆடையை அணிந்து கொண்டு பக்கோடா தயார் செய்து அவ்வழியாக செல்கிறவர்களுக்கு விற்பனை செய்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

பெங்களூருவில் பாரதீய ஜனதா அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி நேற்று பெங்களூருவில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அருகே கல்லூரி மாணவர்கள் புதியதாக பக்கோடா கடை ஒன்றை திறந்தனர். அவர்கள் பக்கோடா தயார் செய்து அவ்வழியாக சென்றவர்களுக்கு வழங்கினர்.

பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் பட்டம் பெறும் போது அணியும் ஆடையை அணிந்த வண்ணம் அவர்கள் தங்களுடைய பக்கோடா கடையில் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டனர். ‘மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா’ என கோஷம் முழங்கியவாறு கடையை நடத்தினர். அந்த மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாடி கட்சியினர் பக்கோடா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அசாம் கான் கலந்துக்கொண்டார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக இந்தப் போராட்டம் பிரபலமாகி வருகிறது.

 

×Close
×Close