/indian-express-tamil/media/media_files/2025/09/29/modi-1-2025-09-29-12-02-00.jpg)
Giorgia Meloni and Narendra Modi
Italian PM Giorgia Meloni's Book: I Am Giorgia — My Roots, My Principles: இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான, “நான் ஜார்ஜியா – என் வேர்கள், என் கொள்கைகள்” (I am Giorgia — My Roots, My Principles) புத்தகத்தின் இந்தியப் பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.
மோடி தனது முன்னுரையில், மெலோனியின் இந்த சுயசரிதை அவருடைய ’மன் கி பாத்’ (மனதின் குரல்) என்று வர்ணித்துள்ளார். மேலும், மெலோனியின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மெலோனியை ஒரு “தேசபக்தர் மற்றும் சிறந்த சமகாலத் தலைவர்” என்றும் மோடி புகழ்ந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தான் பல உலகத் தலைவர்களுடன் உரையாடியதாகவும், அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தனிப்பட்ட கதைகளைத் தாண்டி, ஒரு பெரிய விஷயத்தைக் குறிப்பதாகவும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
பிரதமர் மெலோனியின் வாழ்க்கையும், அவருடைய தலைமைப் பண்பும் இந்த உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது. சிறந்த சமகால அரசியல் தலைவர் மற்றும் ஒரு தேசபக்தரின் புத்துணர்ச்சியூட்டும் கதையாக இது இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும்.
உலகத்துடன் சம அளவில் தொடர்புகொள்ளும் அதே வேளையில், ஒருவரின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மெலோனின் கொண்டுள்ள நம்பிக்கை, நமது சொந்த விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது,” என்று மோடி தனது முன்னுரையில் எழுதியுள்ளார்.
பிரதமர் மெலோனியின் இந்தப் புத்தகம் கடந்த 2021-ஆம் ஆண்டு அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இத்தாலியில் எழுதப்பட்டு அதிக விற்பனையான புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் அமெரிக்கப் பதிப்பு 2025 ஜூன் மாதம், அமெரிக்க அதிபரின் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் சிறு முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
மெலோனின் தான் ஒரு பெண், திருமணமாகாத தாய், மேலும் கர்ப்பமாக இருக்கும்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கவில்லை என்பதால், தனக்கு எதிராக நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் பற்றிய நிகழ்வுகளை தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
“ஒரு பெண், பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவானது. என்னைப் போன்ற ஒருவரை, குழந்தை பிறக்கப் போகிறது என்பதால் ஒதுங்கிச் செல்லச் சொன்னால், தற்காலிக வேலை பார்க்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?
குழந்தைகள் ஒரு குறைபாடு அல்ல என்பதை நான் நிரூபிக்க விரும்பினேன்” என்று மெலோனின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.