அஜ்மீர் தர்கா 'உருஸ் விழா': புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம் வழங்கினார். இது 808வது உருஸ் விழாவாகும். மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உடன் இருந்தார்
அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம்(மக்பரா)ஆகும். இவர் கரீப் நவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த அடக்கத்தலம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Advertisment
அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும். கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம் வழங்கினார். இது 808வது உருஸ் விழாவாகும். பிரதமர் புனித போர்வை வழங்கும் புகைப்படைத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வின் போது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உடன் இருந்தார்.
இந்த விழாவிற்கு வழக்கமாக தலைவர்கள் புனித போர்வையை வழங்குவது வழக்கம். 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா புனித போர்வையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஜா முகையதீன் சிஷ்தி : காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர். இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.