அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் மேம்பாலம் ஒன்றில் காத்திருக்க நேரிட்டது. இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மோடிக்கு பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
முதல்வரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கமளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தங்கள் மீது தவறு இல்லை எனவும் இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல் என கூறியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் லைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, " பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
அந்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் , பஞ்சாப் கூடுதல் டிஜிபி, என்ஐஏ ஐஜி சண்டிகர் டிஜிபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், இந்த விஷயத்தை "ஒருதலைப்பட்ச விசாரணைக்கு விட்டுவிட முடியாது", நீதித்துறையில் பயிற்சி பெற்றவர்கள் மூலம் இச்சம்பவத்தை தீவிரமாக விசாரித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த குழு, பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்ந்தும், பிரதமர் மற்றும் அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு என்னென்ன பாதுகாப்புகள் தேவை என்பதை பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது.
இரு அரசுகளும் நியமித்த விசாரணைக் குழுவிற்கு தடை விதித்து, உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil