பிரதமர் நரேந்திர மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் -19 க்கான தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
இன்று அதிகாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் பி.நிவேதா என்பவரால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவருடன் இருந்த இரண்டாவது செவிலியர் கேரளாவைச் சேர்ந்தவர்.
செவிலியர் பி.நிவேதா பிரதமர் மோடிக்கு தடுப்பு மருந்து செலுத்திய அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
தடுப்பூசி எடுத்துக் கொல்வதற்கு முன்பாக நரேந்திர மோடி," அரசியல் வாதிகளுக்கு தோல் மிகவும் அழுத்தமாக இருக்கும். அதுனால, பெரிய ஊசிய எடுத்துட்டு வந்து போடுங்க" என்று பிரதமர் அங்குள்ள செவிலியர்களிடம் கிண்டலடித்துள்ளார். மேலும், செவியிலர் பி.நிவேதா புதுச்சேரி ஒன்றியத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தவடன் அவருடன் தமிழில் பேசுவதற்கு மோடி முயற்சி செய்திருக்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் ,"எய்ம்ஸில் எனது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டேன். இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதில் நமதுவிஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பங்கு அளப்பரியாதது. தகுதியுடைய அனைவரும் கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், " கொரானாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டது மிகச்சிறந்த உதாரணம். அவருக்கு தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பை புதுவையைச் சேர்ந்த செவிலியர் நிவேதா பெற்றுள்ளார் என்பது பெருமை புதுச்சேரியும் தீவிர தடுப்பூசி இயக்கம் மேற்கொண்டு கொரோனா இல்லாத புதுச்சேரி படைப்போம்" என்று பதிவிட்டார்.
முன்னதாக, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இன்று, பிரதமர் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளும் நிகழ்வில் இந்த மாநிலங்கள் குறித்த மறைமுக குறியீடு இருந்ததாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தடுப்பூசியை நிர்வகித்தவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செவிலியர் பி.நிவேதா. அவருடன் பிரதமர் தமிழ் மொழியில் வணக்கம் செலுத்தியுள்ளார். உடன் இருந்த மற்றொரு செவிலி கேரளாவைச் சேர்ந்த ரோசம்மா அணில் என்பவர் ஆவார். பிரதமர் மோடி அணிந்திருந்த உடை மேற்கு வங்க மாநில வகையை சார்ந்தது என்றும், தோளில் அவர் போட்டிருந்தது அசாம் மாநிலத்தின் பாரம்பரியத் துண்டு எனவும் கூறப்படுகிறது.
பாரத் பயோக் டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை பிரதமர் இன்று எடுத்துக் கொண்டார். இந்த தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது.
இதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை நிபுணர் குழு ஆய்வு செய்து, அவசர சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை செய்தது. இந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் பரிசோதனையும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி போடும் இரண்டாவது கட்டம் இன்று தொடங்கியது.
முதல்கட்டத்தில் இன்று காலை வரை ஒரு கோடியே 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“