/indian-express-tamil/media/media_files/2025/05/13/uAVnZmoI2aoM4wq1ymR8.jpg)
மத்திய பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, "அவர்களின் சகோதரி மூலம்" இந்தியா பாடம் புகட்டியதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும், ஆப்ரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த கர்னல் சோஃபியா குரேஷியை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மாஹுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷா, இந்தியாவின் மகள்களை விதவைகளாக்கியவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி "அவர்களின் சகோதரி மூலம்" பாடம் புகட்டினார் என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார்.
இதனால் சர்ச்சை எழுந்த பின்னர், "எனது உரையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். என் பேச்சு அந்த அர்த்தத்தில் இல்லை என்பதை மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவர்கள் நமது சகோதரிகள். அவர்கள் ஆயுதப் படைகளுடன் இணைந்து பெரும் வலிமையுடன் பழிவாங்கியுள்ளனர்" என்று ஷா விளக்கம் அளித்தார்.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, ஷா ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு விட்டதால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் அவரது கருத்தை வெட்கக்கேடானது என்று கூறியுள்ளது.
"நாம் அனைவரும் பெருமை கொள்ளும் இந்தியாவின் மகள்கள் - இதனை புரிந்து கொள்ளாத அமைச்சர், அவர்களை பயங்கரவாதிகளின் சகோதரி என்றும், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். இந்திய ராணுவத்திற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மோகன் யாதவின் (முதலமைச்சர்) இந்த அமைச்சர் கூறுகிறார்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபினவ் பரோலியா கூறினார்.
2013 ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மனைவியைப் பற்றி தவறான கருத்து கூறியதாகக் கூறி, ஷா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. பின்னர் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். ஹர்சூத் தொகுதியில் இருந்து, அவர் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த கருத்துக்கு பதிலளித்து, ஷாவை பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"மத்திய பிரதேச பா.ஜ.க அரசின் அமைச்சர், நமது துணிச்சலான மகள் கர்னல் சோஃபியா குரேஷியை பற்றி மிகவும் அவமானகரமான, வெட்கக்கேடான மற்றும் ஆபாசமான கருத்துகளை கூறியுள்ளார்," என்று கார்கே தெரிவித்தார்.
"பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் மனநிலை எப்போதும் பெண்களுக்கு எதிரானது. முதலில், பஹல்காமில் வீரமரணம் அடைந்த கடற்படை அதிகாரியின் மனைவியை சமூக ஊடகங்களில் கிண்டல் செய்தனர். பின்னர் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் மகளுக்கு எதிராக பேசினர். இப்போது பா.ஜ.க அமைச்சர்கள் நமது துணிச்சலான சோஃபியா குரேஷியை பற்றி இதுபோன்ற கண்ணியமற்ற கருத்துகளை கூறுகின்றனர்," என்று கார்கே குற்றம் சாட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.