மத்திய பட்ஜெட் 2023: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 172% நிதி அதிகரிப்பு; 100 நாள் வேலை திட்டத்திற்கு மிகவும் குறைவு | Indian Express Tamil

மத்திய பட்ஜெட் 2023: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 172% நிதி அதிகரிப்பு; 100 நாள் வேலை திட்டத்திற்கு மிகவும் குறைவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 21.66% குறைவாகவும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 172% அதிகமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2023: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 172% நிதி அதிகரிப்பு; 100 நாள் வேலை திட்டத்திற்கு மிகவும் குறைவு

இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது.
2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்திற்கான (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-Rural)) திட்டத்திற்கு 172 சதவீதம் நிதி அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.54,487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 100 நாள் வேலைத் திட்டம் எனக் கூறப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) 21.66 சதவிகிதம் நிதி கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) 2023-24-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ரூ. 60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.73,000 கோடியை விட 21.66 சதவீதம் குறைவாகும். முந்தைய நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89,400 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். 2021-22-ஆம் ஆண்டில் ரூ.98,468 கோடி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே ஒருமுறை மட்டுமே MGNREGS பற்றி குறிப்பிட்டார். “காடு வளர்ப்பில் இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் வகையில் MGNREGS, CAMPA நிதி மற்றும் பிற நிதி ஆதாரங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பதன் மூலம், கடலோரம் மற்றும் உப்பு நிலங்களில் சதுப்புநிலத் தோட்டம், கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முயற்சி (MISHTI) ஆகியைவை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்ந்து, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அறிவித்தார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என இரண்டு வகைகள் உள்ளன. இதில் PMAY-Rural (கிராமப்புற) திட்டத்திற்கு ரூ. 54,487 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23யில் ஒதுக்கப்பட்ட ரூ. 20,000 கோடியை விட 172 சதவீதம் அதிகமாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.48,422 கோடியை விட அதிகமாகும்.

ரூ.54,487 கோடியில், திட்டக் கூறுகளுக்கு ரூ.50,486.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதே சமயம் ரூ.4,000 கோடி வரவு-செலவுக் கடன்களுக்கு நபார்டு வங்கிக்கு வட்டி செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pmay rural fund sees big jump in union budget mnregs allocation cut