/indian-express-tamil/media/media_files/2025/09/15/susheela-vs-sowmiya-2-2025-09-15-22-32-29.jpg)
ராமதாஸின் மனைவி சுசீலா மற்றும் அன்புமணியின் மனைவி சௌமியா. Photograph: (Express/screengrabs)
பா.ம.க-வுக்குள், அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியாவை "இரண்டு கும்பல்" (Gang of Two) என்று கட்சி உள்வட்டாரங்களில் அழைக்கின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மா சே துங்கின் காலத்தில் அதிகாரம் செலுத்திய "நான்கு கும்பல்" (Gang of Four) என்றழைக்கப்பட்டதில், மாவோ-வின் சக்திவாய்ந்த மனைவியும் ஒருவர். அதே பாணியில் இவர்களுக்கும் இந்த அடைமொழி சூட்டப்பட்டுள்ளது. அன்புமணி கட்சியில் தனது பிடியை இறுக்க, அவரது மனைவி சௌமியா அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா, தி.மு.க வேட்பாளரிடம் 20,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
86 வயதான ராமதாஸ் பக்கம் அவரது மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, காந்திமதியின் மகன் பரசுராமன் முகுந்தன் மற்றும் மற்றொரு மகள் உள்ளனர். ஆனால், ராமதாஸ்-க்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததற்கு ராமதாஸின் இரண்டாவது மனைவி 60 களின் பிற்பகுதியில் இருக்கும் சுசீலாவே காரணம் என்று நம்பப்படுகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், சுசீலா படிப்படியாக ராமதாஸ் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த நபராக மாறியுள்ளார். “ராமதாஸை அணுகுவதை அவர்தான் நிர்வகிக்கிறார், தகவல்களை வடிகட்டுகிறார், ராமதாஸின் மனநிலையைக் கட்டுப்படுத்துவது என அனைத்திலும் சுசீலா செல்வாக்கு செலுத்தி வருகிறார். அன்புமனி எப்போதும் அரசியல் வாரிசாக கருதப்பட்டாலும், அவரது ஆதிக்கமே அன்புமணியை அந்நியப்படுத்தியது” என்று ஒரு தலைவர் குற்றம் சாட்டினார்.
கட்சியின் உள்வட்டாரங்களின்படி, சுசீலா பா.ம.க மீது அன்புமணியின் முழுமையான கட்டுப்பாட்டை விரும்பவில்லை. எனவே, காந்திமதியின் மகன் முகுந்தனுக்கு கட்சியில் ஒரு இடத்தை உருவாக்க ராமதாஸை வலியுறுத்தியுள்ளார். இதுவே குடும்பப் பிளவை வெளிப்படையாக்கியது.
இருபினும், பா.ம.க-வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்தப் போராட்டத்தில், அன்புமணி மற்றும் அவரது மனைவியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) என்ற அந்தஸ்தையும் 20% இடஒதுக்கீட்டையும் பெற்றுத் தந்ததற்காக, வன்னியர் சமூகத்தினரால் நீண்ட காலமாக 'ஐயா' என்று போற்றப்படும் ராமதாஸை விட மேலோங்கி வருவதாகத் தெரிகிறது.
அன்புமணி மற்றும் சௌமியா ஆகியோருக்கு பா.ம.க-வின் 3 எம்.எல்.ஏ-க்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சியின் விசுவாசமான வன்னியர் சங்கம் ஆதரவு உட்பட கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனெனில், 56 வயதான அன்புமணி, கட்சியின் எதிர்காலமாக தொண்டர்களால் பார்க்கப்படுகிறார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சௌமியா, அவரது முடிவுகளில் பங்கு வகிப்பதாகவும், அவருக்கு நெருக்கமாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், 53 வயதான அவர் தர்மபுரியில் போட்டியிட்டு, தி.மு.க வேட்பாளரிடம் 20,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
“அதிகாரம் என்பது வேகத்தைக் குறிக்கும்,” என சென்னை பா.ம.க தலைவரொருவர் கூறினார். “அந்த வேகம் அன்புமணிக்கே உள்ளது. கட்சியின் முகம் அவர் தான், செயல் வீரர்கள் யாரிடம் சென்று வணங்குகிறார்களோ அவர் தான். ஐயா இப்போது சடங்குத்தன்மையிலேயே இருக்கிறார். நாங்கள் அவரை மரியாதை செய்கிறோம்.”
மற்றொருவர் கூறியதாவது: “சுயநல காரணங்களாலேயே அன்புமணியைச் சுற்றி செயல் வீரர்கள் திரண்டு இருக்கலாம். ஆனால், வன்னியர் சமூகத்தின் சாதாரண வாக்காளர்கள், பல தசாப்தங்களாக சமூகத்திற்காக போராடிய மூத்தவர் ராமதாஸ்ஸை எளிதில் புறக்கணிக்க முடியாது.” என்று கூறினார்.
இந்த பிளவு ஆச்சரியமளிப்பதற்குக் காரணம், இருபது ஆண்டுகளாக அன்புமணியை வழிநடத்த அப்பா ராமதாஸ் தயார் செய்து வந்தார்; காலத்தோடு முன்னேற விரும்பிய கட்சியின் முகமாகக் கருதப்பட்டார். 2004-ல் யு.பி.ஏ ஆட்சிக்கு வந்தபோது, மருத்துவப் பயிற்சி பெற்றும், அரசியலுக்கு புதிதாக நுழைந்தும் இருந்த அன்புமணி, கட்சியால் மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். சுகாதார அமைச்சராக அவர் அமைச்சரவையின் இளம் உறுப்பினராக இருந்தார்.
2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பா.ம.க-வின் தேர்தல் கோஷம் “மாற்றம். முன்னேற்றம். அன்புமணி” என்பதாக இருந்தது – இது, அடித்தட்டு சாதி அரசியலிலிருந்து விலகிய ஒரு கூர்மையான மாற்றத்தை குறித்தது.
ஆனால் பா.ம.க தனது சாதி சார்ந்த கட்சி என்ற முத்திரையை எப்போதும் விலக்கிக்கொள்ள முடியவில்லை; தர்மபுரி போன்ற மாவட்டங்களில் தலித் எதிர்ப்பு வன்முறைகளில் அதன் பெயர் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இதனால் அன்புமணியின் பிம்பம், பா.ம.க பழைய அணியினரின் உருவத்துடன் முரண்பட்டிருந்தாலும், அவரது மருமகன் முகுந்தன் களத்தில் குதித்தது வரை அது கட்சியின் உள்ளே பிரச்னையில்லை.
2024 டிசம்பரில், பா.ம.க பொதுக் குழுக் கூட்டத்தில், ராமதாஸ் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்தார், “அன்புமணிக்கு உதவுவதற்காக.” அதற்கு அன்புமணி திறம்பட அதிருப்தி தெரிவித்தார்; மேடையிலேயே, “எனக்கு உதவி வேண்டுமா? எனக்கு தேவையில்லை” என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும் கூறினார்: “முகுந்தன் நான்கு மாதங்களுக்கு முன்தான் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது?”
நிறுவனர் ஒருவரைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்த கட்சியில், அந்த தருணம் செயல் வீரர்களையும் அரங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. ராமதாஸ் முகம் சிவந்தபடி பதிலளித்தார்: “யாராக இருந்தாலும், எனக்குச் செவிசாய்க்க வேண்டும். கேட்கவில்லை என்றால், வெளியேறலாம்.” என்றார்.
பா.ம.க தலைவர்களின் கருத்துப்படி, அன்புமணி இவ்வளவு கடுமையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்ததற்குக் காரணம், சுசீலாவின் ஆதிக்கம் மற்றும் முகுந்தனின் நியமனம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் தான்.
அதுமட்டுமின்றி, பா.ம.க-வின் தமிழ்நாட்டு இணை கட்சிகள் — அ.தி.மு.க மற்றும் தி.மு.க — தங்களுடைய வாரிசு சண்டைகளை சந்தித்திருந்தாலும், 2025 ஜூன் மாதத்தில் தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி உளவு சாதனங்களை வைத்ததாக ராமதாஸ் அணியினர் குற்றஞ்சாட்டியது, இந்த பிளவை இறுதி கட்டத்துக்கு கொண்டு சென்றதாகக் கருதப்படுகிறது.
மேலும், தந்தை - மகன் இடையேயான முரண்பாடு அரசியல் கூட்டணிகளிலும் உள்ளது. ராமதாஸ், வட மாவட்டங்களில் பா.ம.க-வின் பலத்தை பயன்படுத்தும் வகையில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுடன் மீண்டும் இணைவதை விரும்புகிறார். ஆனால், அன்புமணி, தேசிய முக்கியத்துவத்திற்கும் சுயாதீனத்திற்கும் வாய்ப்பளிக்கும் வகையில், என்.டி.ஏ மற்றும் பா.ஜ.க நோக்கி சாய்ந்துள்ளார்.
அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மீண்டும் கூட்டணியில் சேர்ந்திருந்தாலும், இதைச் சுற்றியுள்ள தந்தை - மகன் கருத்து வேறுபாடு இன்னும் முக்கியமான பிளவாகவே உள்ளது.
அன்புமணி கட்சிப் பொறுப்பேற்றால், அது பா.ஜ.க-வின் டெல்லி தலைமையின் அமைதியான ஆசீர்வாதத்தோடு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வன்னியர் வாக்குகளில் இன்னும் வலுவான பிடியை வைத்திருக்கும் மூத்தவர் ராமதாஸ்ஸை புறக்கணிக்க பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் எச்சரிக்கையாக இருக்கின்றன. ராமதாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்துவிடுவாரோ என்ற அச்சமே அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.