இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள மாநில கட்சிகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிய பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, ராஷ்டிரிய லோக் தள கட்சி, புரட்சிகர சோஷலிச கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, மக்கள் ஜனநாயக கூட்டணி, மிசோரம் மக்கள் மாநாட்டுக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் சின்னம் ( பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968ன் பிரிவின் கீழ், மாநில கட்சி அந்தஸ்தை பெற்ற கட்சிகள் சட்டசபை தேர்தலில் குறைந்தது 6 சதவீதம் வாக்குகளை பெற்றிக்க வேண்டும் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை தவறிய கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க அந்த கட்சிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த லோக்சபா தேர்தலில், சோபிக்கத்தவறிய தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.