பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சிபிஐ அமைப்பிடம் வங்கி நிர்வாகம் சமீபத்தில் புகார் அளித்தது.
இதில் கடந்த ஆண்டு நடந்த சுமார் ரூ.280 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷி மற்றும் 2 வங்கி அதிகாரிகள் ஆகியோர் மீது கடந்த மாதம் 31-ம் தேதியே சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு பதியப்படும் முன்னே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றார். அதாவது நிரவ் மோடியும், அவரது சகோதரர் நிஷாலும் கடந்த மாதம் 1-ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடிமகன் ஆவார்.
நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகளில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த 11,400 கோடி மோசடியில், பெரும்பாலான புரிந்துணர்வு கடிதங்கள் 2017-18ம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிரவ் மோடியின் தாய் வழி உறவினரான மெஹுல் சோக்சி மீதும், அவரது மூன்று நிறுவனங்கள் மீதும் கடந்த வியாழன் அன்று சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. மெஹுல் சோக்சி 143 புரிந்துணர்வு கடிதங்கள் வழங்கி பஞ்சாப் நேஷ்னல் வங்கயில் 4,886.72 கோடி மோசடி செய்துள்ளனர் என சிபிஐ கூறியுள்ளது.
நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் பல பழைய புரிந்துணர்வு கடிதங்களை 2017ம் ஆண்டு புதுப்பித்து வங்கியில் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். இந்த மோசடியில், 2015-17 வரை பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் நரிமன் பாயின்ட் கிளையின் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்த திவாரி, துணை தலைமை மேனேஜராக தற்போது பணி புரியும் சஞ்சய் குமார் பிரசாத், ஆடிட்டராக பணிபுரிந்த மொஹிந்தர் ஷர்மா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த முறைகேட்டில் பங்குபெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் நிரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5,674 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.