நிரவ் மோடியின் ரூ.524 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

நிரவ் மோடிக்கு சொந்தமான 524 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்

By: February 24, 2018, 3:30:51 PM

நிரவ் மோடிக்கு சொந்தமான 524 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனால், நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வங்கி அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்கள், கடைகள், அலுவலகங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நிரவ் மோடியின் நகைக் கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல் 141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்றுமுன்தினம், நிரவ் மோடியின் 94 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிரவ் மோடி நிறுவனத்தில் இருந்து ஏராளமான விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பல்வேறு பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் 176 இரும்பு பீரோ, 158 பெட்டிகள், 60 கண்டெய்னர்கள் ஆகியவற்றிலும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று ரூ.44 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடந்த சோதனையில் நிரவ் மோடிக்கு சொந்தமான 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன.

முடக்கப்பட்ட சொத்துகளில் 6 குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடங்கள் மும்பையிலும், 2 பிளாட்கள் புனே நகரிலும், பண்ணை வீடு ஒன்று அலிபாவுக் பகுதியிலும், ஒரு சோலார் சக்தி நிலையம் மற்றும் 135 ஏக்கர் நிலமும் அஹமத் நகரிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pnb fraud case ed attaches properties worth rs 523 crore of nirav modi group

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X