Shalini Nair
POCSO Act Amendment Bill 2019 : போக்ஸோ சட்டம் (POCSO Act 12) மீதான திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நாளுக்கு நாள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சிறார்கள் மீது நடைபெறும் இது போன்ற வன்முறைகளை ஒரு போதும் ஏற்றக் கொள்ள இயலாது என்பதை உணர்ந்து பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ 2012 சட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்கள் நேற்று நாடாளுமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
போக்ஸோ சட்டத்தில் மிக முக்கியமான 21 மாற்றங்கள் இந்த மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்ஸோ சட்டம், பிரிவு 6 கீழ் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக குறைந்த பட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிகபட்ச தண்டனை என்பது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் அறிவிக்கப்படும் போது, இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறையும். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மரியாதை உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளது. இந்த போக்ஸோ சட்டம் திருத்த மசோதா (POCSO (Amendment) Bill, 2019) 16வது நாடாளுமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இடையே தேர்தல் நடைபெற்றதன் விளைவாக மீண்டும் மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறையினர், ராணுவத்தினர், குழந்தையின் உறவினர்கள், அரசு பணியில் அமர்த்தப்பட்டிருப்பவர்கள் குழந்தைகளின் நம்பகத்தன்மைக்கு உரியவர்கள். அவர்களால் நடைபெறும் பாலியல் வன்புணர்வுகளுக்கும், கல்வி நிலையங்கள், தங்கும் விடுதிகள், மதக்கல்வி நிலையங்களில், அந்த நிறுவன அதிகாரிகளால் நடைபெறும் பாலியல் வன்புணர்வுகளுக்கும் தண்டனைகள் அதிகம் ஆக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆயுதம் கொண்டு மிரட்டி, நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளுக்குபவர்களுக்கும் தண்டனைகள் அதிகமாக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்கள், பிறப்புறுப்பு சிதைவுகள், பாலியல் வல்லுறவால் பெண் குழந்தைகளை கர்ப்பமாக்குதல், எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய் தொற்றினை பரப்புதல் போன்ற குற்றங்களுக்கும் தண்டனைகள் இந்த சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனநலம் மற்றும் உடல்நலம் குன்றிய குழந்தைகள் மீது நடத்தப்பட்டும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிதாக திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கலவர காலங்களை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றும் திருத்த மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மற்றும் இயற்கை அழிவுகளில் இருந்து மீண்டு வந்த குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று, புதிய பிரிவு இந்த சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய தரவுகளின் படி, இது போன்ற இடர்களில் இருந்து வரும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இது போன்ற ஒரு சூழலை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : போக்ஸோ சட்டம் கூறுவது என்ன? புதிய மாற்றங்கள் என்ன?
POCSO Act Amendment Bill 2019 : தண்டனைகளில் மாற்றம்
இந்த சட்டத்தின் நான்காவது பிரிவில், 16 முதல் 17 வயது குழந்தைகளின் மீது நடத்தப்படும் கட்டாய வல்லுறவுக்கான தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கான தண்டனை 20 வருடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை கம்ர்சியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது / பார்ப்பது / சேமித்துவைப்பது ஆகியவையும் குற்றமே. அவை கண்டறியப்பட்டால் அதற்கான தண்டனை மூன்று முதல் 5 ஆண்டுகளாகும். அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு தரப்பு அறிவிக்கின்றது. மேலும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, 3%க்கும் குறைவான, குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. பாதிக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான நீதி கிடைக்க இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசு.