வேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர்களுக்கு தங்கள் வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரமும் தெரிந்துக் கொள்வது அடிப்படை உரிமையாகும்

இனி வரும் காலங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வருமானத்திற்கான ஆதாரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய  சொத்துக்களை கணக்கில் காட்டும்போது,  அந்த சொத்துக்கள் எந்த வழியில் வந்தன? என்ற ஆதரத்தை குறிப்பிடுவதில்லை. எனவே, இனி வரும் காலங்களில்  வேட்பாளர்கள்  தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் காட்டும் போது, அவை எந்த வழியில் வந்தன? என்ற ஆதரத்தையும் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய உத்தரவிட  வேண்டும் என்று  அரசு சாரா நிறுவனம்  உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று(16.2.18)  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகள் மற்றும் தன்னை சார்ந்தோரின் வருமானத்தையும், அந்த வருமானம் எப்படி வருகிறது? சொத்துக்கள் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம்? போன்ற மொத்த  விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்   என்று உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம்,  தேர்தலின் போது வெளிப்பட தன்மை மற்றும் வேட்பாளர்கள் குறித்த ,முழுவிபரமும் பொதுமக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் தெரிய வரும் வகையில்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் இனி வரும் காலங்களில் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தின் வழியையும் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது .வாக்காளர்களுக்கு தங்கள் வேட்பாளர்கள் குறித்த அனைத்து  விவரமும்  தெரிந்துக் கொள்வது அடிப்படை உரிமையாகும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close