புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று (ஜன 25) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் த. செல்வம், சபாநாயகருக்கு உரித்தான மரபுகளை மீறி அனைத்து அரசு விழாக்களில் கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுபோன்ற விழாக்களில் பேசும் போது, தொடர்ந்து வரம்புகளை மீறி பேசி வருகிறார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு உளவியல் மாநாட்டில் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். அதில் பேசும்போது தான் என்ன பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், எப்படிப்பட்ட வார்த்தையை பிறர் மீது சுமத்துகிறோம் என்று கூட அறியாமல் மனம் போன போக்கில், புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் சைக்கோ போன்று இருக்கிறார்கள் என பேசியுள்ளார்.
ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயிலும் யாரோ ஒரு மாணவன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த தனியார் பள்ளி மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அவமதிக்கும் வகையில் தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்ற குணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என சபாநாயகர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தான் ஒரு சட்டப்பேரவை தலைவர் என்பதையும் மறந்துவிட்டு, அவர் பேசியுள்ள இந்த வார்த்தையை திரும்ப பெற வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சைக்கோ என்று விமர்சிக்கும் சபாநாயகர் செல்வம், அவரது பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் தான் படித்தார்கள் என்பதை மறந்துவிட்டாரா? அது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் உள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பலரும் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்கின்றனர். அப்போது அவர்களையும் சைக்கோ என்று சபாநாயகர் கூறுகிறாரா?
தனியார் பள்ளிகள் மனம் போன போக்கில் அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. பிரெஞ்சுகாரன் காலத்தில் இருந்து அரசின் ஒட்டுமொத்த விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளில் கூட சில தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பள்ளிக்கூடங்கள் நடத்த இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? 100 சதவீத தேர்ச்சி ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு பிள்ளைகளை தனியார் பள்ளிகள் வாட்டி வதைக்கின்றன. பள்ளிகளின் கால நேரம், சபாநாயகரின் குற்றச்சாட்டு என்பது ஏற்புடைய ஒன்றாகும். இது சம்பந்தமாக மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகிறது. விதிமுறைகள் மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கல்வித்துறை இயக்குநரும், கல்வித்துறை செயலரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறார்கள். அரசின் சட்டதிட்டங்களை மீறி செயல்படும் எந்த தனியார் பள்ளியாக இருந்தாலும் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியரும், தலைமை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று கல்வித்துறை சார்பில் விதிமுறை மீறி செயல்படும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இதையும் மீறி சில தனியார் பள்ளிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டி முன்கூட்டியே கல்வி கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதன் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.