/indian-express-tamil/media/media_files/2025/05/27/SeYtXkM1zaq95ymIKCyi.jpg)
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50% இடங்களை அரசு பெறுவதில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
அதன்படி, "சமூக, சமுதாயப் பிரச்சனைகள் மற்றும் மாணவர்களுக்காகத் தீர்க்க வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, சட்ட வடிவ தீர்வை காண வேண்டியது அவர்களின் கடமையாகும். அந்த வகையில், கடந்த கால திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய பா.ஜ க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி 50% இடங்களை அரசு பெறாமல், ஆண்டுதோறும் 36% இடங்களை மட்டுமே புதுச்சேரி பெறுகிறது.
இது சம்பந்தமாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களைப் பெற வலியுறுத்தி எந்த கேள்வியோ, அரை மணி நேர விவாதமோ, கவன ஈர்ப்பு தீர்மானமோ, வெளிநடப்போ உள்ளிட்ட எதையும் விவாதத்திற்குக் கொண்டு வராமல் சட்டமன்றத்தில் வாய் மூடி மௌனம் காத்தனர். புதுச்சேரி மாணவர்களுக்கு 50% இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக அரசு பெற வலியுறுத்தி தி.மு.க சட்டமன்றத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காமல், ஆளும் அரசுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.
தற்போது தங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசின் இட ஒதுக்கீடாகப் பெற வேண்டும் எனத் தீர்மானம் போட்டுள்ளது, மக்களை ஏமாற்றும் செயலாகும். பேச வேண்டிய இடத்தில் சட்டமன்றத்தில் பேசாமல் மௌனமாக அரசின் தவறுக்கு துணையாக இருந்துவிட்டு, தற்போது வெளியில் தீர்மானம் போடுவது தி.மு.க-வின் இரட்டை வேடமாகும்" என்று கூறினார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்குவதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது குறித்தும் அன்பழகன் பேசினார். "இதுபோன்ற எச்சரிக்கையை அவர் தான் சார்ந்த காவல்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம் வாங்குபவர்களை அழைத்தும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, மாநில கழக துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.