கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கும், பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் மற்றும் அவரது தங்கை பூர்ணிமா ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதைய அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார் அளித்த புகாரின் பேரில் உமாசங்கர், பூர்ணிமா மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், எதிர் தரப்பு அளித்த புகாரை லாஸ்பேட்டை காவல் நிலையம் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் கொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்சினை காரணமாகவே அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டதாக உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 27-ஆம் தேதி அமைச்சர் பதவியை சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தார்.
நிலப்பிரச்சினையில் லாஸ்பேட்டை காவல் நிலையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி, உமாசங்கரின் தங்கையான பூர்ணிமா புதுவை குற்றவியல் நீதிமன்றம் 1-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சாய் சரவணன் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 173 மற்றும் 175 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், லாஸ்பேட்டை காவல் நிலையம் இந்த வழக்கை விசாரிக்கத் தவறிவிட்டதாகக் கூறிய நீதிபதி, முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, லாஸ்பேட்டை காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.