புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பூஜ்ஜிய நேரம் நடைபெற்றது. இதில் மாஹே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் உரையாற்றினார். அப்போது, "புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கும், சான்றிதழ் வழங்குவதற்கும் கால தாமதம் ஏற்படுவதால் மாணவர்களின் உயர் கல்விற்கு அட்மிஷன் கிடைப்பதற்கு கடினமாக இருக்கிறது.
இதுமட்டுமின்றி மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களில் கால தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலைமை உள்ளது. மதிப்பு சான்றிதழில் நிறைய தவறுகள் வருகின்றன.
2018-ஆம் ஆண்டிற்கு பிறகு பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், தேவையான சான்றிதழ்களை பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்த காலத்திற்குள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.