புதுச்சேரியில் உதவி கேட்பது போன்று நடித்து பள்ளி மாணவனிடம் இருந்து விலை உயர்ந்த சைக்கிளை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட நாராயணதாஸ் வீதியில், 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது பெற்றோர் வாங்கி கொடுத்த ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய சைக்கிளில், நேற்று மதியம் வீட்டிற்கு அருகே இருக்கும் கடைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் தனது பர்ஸ் அருகே இருக்கும் கடையில் தொலைந்து விட்டதாகவும், சைக்கிள் கொடுத்து உதவினால் உடனடியாக அதனை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய மாணவன், தனது சைக்கிளை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அப்பெண் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன், சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், பெரியகடை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.