புதுச்சேரியில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன்பேரில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். ஆனால், அவர்களுக்கு தற்போது வரை பணி வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று புதுச்சேரி அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சடலம் போன்று வேடமணிந்து ஒப்பாரி வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.