புதுச்சேரியில், இன்று (மார்ச் 7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் ஆதரவு அளித்து வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்
தொகுதி சீரமைப்பு, மும்மொழியை மத்திய அரசு திணிக்கிறது. புதுச்சேரியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்மொழி கொள்கை நீக்கப்படும். துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தரவு போட முடியாது.
துணைநிலை ஆளுநர் தனி அரசாங்கம் நடத்துகிறார். முதல்வர் ரங்கசாமி தனது பதவியை காப்பாற்றி கொள்ள மௌனமாக இருக்கிறார். புதுச்சேரியே போராட்டக் களமாக காணப்படுகிறது.
அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் போராட்டம் நடக்கிறது.
இது குறித்து முதலமைச்சரோ, அமைச்சர்களோ கவலைப்படுவதில்லை. அவர்களை அழைத்து பேசுவதில்லை. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. இந்த ஆட்சி மக்களை புறக்கணிக்கிறது. இன்னும் 6 மாதத்தில் இந்த ஆட்சியின் கதை முடிந்து விடும். ஆனால் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுகின்றனர்.
மும்மொழி கொள்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இரு மொழி கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறினார்.