புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பேருந்து நிலையத்தில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று கூறி, இந்த முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட இந்தப் புதிய பேருந்து நிலையம், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது பேருந்துகள் மட்டுமே சென்று வரக்கூடிய நிலையில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் முழுமையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து தரப்படவில்லை. இந்த முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், "புதிய பேருந்து நிலையத்தில் நடந்துள்ள முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுப்போம். அவ்வாறு சி.பி.ஐ விசாரிக்கவில்லை என்றால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று தெரிவித்தார்.
செய்தி - பாபு ராஜேந்திரன்