மத்திய அரசை சேராத புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து தீர்மானம்: சுயேச்சை எம்.எல்.ஏ பேட்டி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடைசியாக நிறைவேற்றப்பட்ட 16வது தீர்மானம் இதுவரை மத்திய அரசுக்குச் சென்றடையவில்லை என நேரு சுட்டிக்காட்டினார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடைசியாக நிறைவேற்றப்பட்ட 16வது தீர்மானம் இதுவரை மத்திய அரசுக்குச் சென்றடையவில்லை என நேரு சுட்டிக்காட்டினார்.

author-image
WebDesk
New Update
Pondy MLA press meet

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி 16வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்கூட இதுவரை மத்திய அரசை சென்றடையவில்லை என்று சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தெரிவித்துள்ளார். தனி மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு இன்று புதுச்சேரி திரும்பிய அவர், ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

Advertisment

மாநில அந்தஸ்து கோரி புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 27, 2025 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் கோரிக்கை கடிதங்கள் அளிக்கப்பட்டது. தலைநகரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக அமைந்ததாக நேரு குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால் பொதுநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும், மாநில அந்தஸ்து கிடைத்தால் அடையக்கூடிய முன்னேற்றங்கள் குறித்தும் போராட்டக் குழு தலைவர்கள் உரையாற்றினர். குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில மக்கள் மேம்பாட்டுக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் ராமதாஸ், மாநில அந்தஸ்து குறித்து தனது கருத்துகளை ஊடகங்களுக்கு பேட்டியின் மூலம் தெரியப்படுத்தினார். பொதுநல அமைப்பினரின் இந்த மாநில அந்தஸ்து போராட்டம் தலைநகர் டெல்லியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisment
Advertisements

புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பொதுநல அமைப்பினர் ரயில் மூலம் டெல்லியை இரவு 2 மணியளவில் அடைந்தவுடன், டெல்லி போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து, தங்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, தங்குமிடம் வரை அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மறுநாள் காலை, டெல்லி போலீசார் மீண்டும் தங்கியிருந்த இடத்திற்கு வந்து, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மூன்று பேருந்துகளில் அனைவரையும் அழைத்துச் சென்று காலை 10 மணிக்கு ஜந்தர் மந்தர் பகுதியில் இறக்கிவிட்டனர். அப்பொழுது அங்கு ஏராளமான டெல்லி போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் உளவுப் பிரிவைச் சேர்ந்த போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டங்கள் முடிந்த பிறகு, டெல்லி போலீசார் மீண்டும் 2 மணியளவில் அதே பேருந்துகளில் ஏற்றிச் சென்று தங்கும் விடுதியில் கொண்டு விட்டனர். டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைகள், மாநில உரிமைக்கான போராட்டத்தின் தாக்கம் அவர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது என நேரு தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடைசியாக நிறைவேற்றப்பட்ட 16வது தீர்மானம் இதுவரை மத்திய அரசுக்குச் சென்றடையவில்லை என நேரு சுட்டிக்காட்டினார்.

தற்போது ஆளுகின்ற அரசு, தேர்தல் வாக்குறுதிகளில் மாநில அந்தஸ்து பெறுவதே தங்கள் குறிக்கோள் என்று கூறி ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இருப்பது ஏன் என்று மக்களுக்கு விளக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதும் தானும், சக சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அந்தஸ்து சம்பந்தமான தீர்மானங்களை கொண்டு வரும்போது, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிப் பேசி தீர்மானங்களை நிறைவேற்றியும், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் கூட்டிப் பேசி தீர்மானங்களை நிறைவேற்றி அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று பலமுறை சட்டமன்றத்தில் உறுதி கூறிய முதலமைச்சர், இதுவரை அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல் இருப்பதாக நேரு கூறினார்.

மேலும், "மாநில அந்தஸ்துக்கான முன்னேற்பாடுகளை ஆளும் கட்சியினர் செய்யத் தவறிய நிலையில், பொதுநல அமைப்பினர் மாநில நலனுக்காக டெல்லியில் போராடிக் கொண்டிருந்த வேளையில், புதுச்சேரியில் ஆளும் கட்சியினர் தங்கள் சுயநல அரசியலுக்காகவும், பதவி சுகத்திற்காகவும் போட்டி போட்டுக்கொண்டு மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக வேறு மூன்று பேருக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கப் போவதாகவும் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இவர்களின் இந்தச் செயலைக் கண்டு இவர்களுக்கு வாக்களித்த மக்கள் வெட்கித் தலைகுனிவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த அரசியல் நாடகத்தால், இந்த ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டு காலத்தில் ஆறு நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து, இவர்களுக்குச் சம்பளமாக பல லட்சங்களையும், ஓய்வூதியமாக பல லட்சங்களையும் புதுச்சேரி மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று பொதுமக்கள் மத்தியில் ஆத்திரம் அதிகரித்துள்ளது. மீதமுள்ள பத்து மாத ஆட்சி காலத்தில் தற்போது நியமிக்கப்படும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, மீதமுள்ள காலத்திற்கு இவர்கள் அரசியல் லாபத்திற்காக மீண்டும் யாரை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப் போகிறார்களோ என்று மக்கள் கேள்வி எழுப்பி புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்" என்றும் நேரு தெரிவித்தார்.

இந்த அரசு பொறுப்பேற்றபோது இரண்டு ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமித்து பொறுப்பளித்ததாகப் பெருமை பேசிக்கொண்ட இவர்கள், அந்த இரண்டு அமைச்சர்களின் பதவிகளையும் பறித்ததுடன், அந்த சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வேரறுத்துள்ளனர். இதனால் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை என்ற அவலநிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு ரயில் மூலம் புதுச்சேரி திரும்பிய மாநில அந்தஸ்துக்கான போராட்டக் குழுவினரை, புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில செயலாளர் அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்று கவுரவித்தார் என்பதையும் நேரு தெரிவித்தார்.

செய்தி - பாபு ராஜேந்திரன்

Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: