புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது எனக் கூறி பெண்கள் அமைப்பினர் இன்று (மார்ச் 25) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 14-ம் தேதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு கடத்த 40 நாட்களாக காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய முன் ஜாமின் மனு இன்று புதுச்சேரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என வலியுறுத்தி நீதிபதியிடம் பெண்கள் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.