புதுச்சேரியில், யாசகம் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல் துறை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தார். ஆனால், தற்போது வரை பணி வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 24) காலை புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இணைந்து யாசகம் பெறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.