புதுச்சேரியில் நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
புதுச்சேரியில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சுமார் 60 மாதங்களுக்கு மேல் ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டது. பல இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சுமார் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கூட்டுறவு துறையின் கீழ் இயங்கிய தற்போது மூடப்பட்ட அரியூர் சர்க்கரை ஆலைக்கு கூட்டுறவுத்துறை இயக்குநர் யஸ்வந்தய்யா ஒதுக்கியதாக தகவல் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“