புதுச்சேரி, தானாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர், பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், பள்ளி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், பள்ளியை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
இந்நிலையில், 10 நாட்களில் தேர்வு நடைபெறவுள்ளதால் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், குற்றமற்றவர் என்றும் அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் துணை மாவட்ட ஆட்சியர், தற்காலிகமாக மாணவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.