/indian-express-tamil/media/media_files/2025/04/30/ucNV1AHjsbU4PdAV0VAM.jpg)
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை, தொடர் வெடிகுண்டு மிரட்டல் என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக ஆளுங்கட்சி எம்எல்ஏ ஜான் குமார் தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ஜான் குமார், புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் சமீப காலமாக முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை, வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளதாகவும் பாஜக பிரமுகர் உமாசங்கர் கொலை செய்யப்பட்டதற்கு மறுநாளே மர்ம நபர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதனால் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை புதுச்சேரியில் உள்ளதாகவும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லாத நிலை உள்ளதாகவும் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழகத்தை போன்று என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே புதுச்சேரியில் குற்றங்கள் குறையும் என்றார்.
புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலராகவும், பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஜான்குமார் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
பா.ஜ.க பிரமுகர் கொலை, வெடிகுண்டு மிரட்டல்; மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ: புதுச்சேரியில் பரபரப்பு pic.twitter.com/9TIefWRcig
— Indian Express Tamil (@IeTamil) April 30, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.