உத்தரபிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமர் போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் இன்று (செவ்வாய் கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
அதில், ஒரு போஸ்டரில், ராகுல் காந்தி ராமரை போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நோக்கி அம்பு எய்வதுபோலவும் உள்ளது.
அந்த போஸ்டரில், ராகுல் காந்தி ராம ராஜ்ஜியம் அமைப்பார் எனவும், பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார் என்றும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் அமேதியில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராம ஷங்கர் சுக்லா என்பவர் மீது எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.