இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2015 -16 வரையிலான 10 ஆண்டுகளில், 271 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம், வறுமைக்கோட்டிற்கு கீழான நிலையிலிருந்து உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி, வாழும் நிலை உள்ளிட்ட 10 காரணிகளை கொண்டு 101 நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரங்கள் குறித்த மதிப்பீட்டை Multidimensional Poverty Index (MPI) என்ற அளவீடு மூலம், ஆக்ஸ்போர்டு போவர்டி மற்றும் ஹியூமன் டெவலப்மென்ட் இனிசியேடிவ் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் இணைந்து மேற்கொண்டது.
இந்த மதிப்பீட்டில், இந்தியா மிகச்சிறந்த பங்கு ஆற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 2005-06 முதல் 2015-16 ஆண்டுவரையிலான 10 ஆண்டுகளில், 271 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலான வாழ்க்கைத்தரத்திற்கு உயர்ந்துள்ளனர். அதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் மக்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், உணவு முறை, சொத்துக்கள், சமையல் சாதனங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், 74.9 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டிற்கு கீழாக இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம், இந்த 10 ஆண்டுகளில் 46.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இந்தியாவில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ஜார்க்கண்டில் தான், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த MPI அளவீட்டின்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் சதவீதம் 55.1 சதவீதம் என்ற அளவிலிருந்து 27.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதாவஐ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்கள்தொகை 640 மில்லியன் என்ற அளவிலிருந்து 369 மில்லியன்களாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.