கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாவீரர் நாளில் (நவ.27) பிரபாகரனின் மகள் துவாரகா தமிழ் ஒளி என்ற யூ டியூப் சேனலில் காணொலி வாயிலாக பேசுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அதன்படி, நேற்று மாலை துவாரகா பேசியதாக ஒரு வீடியோ வெளியானது.
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், ’எத்தனையோ ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களை கடந்தே இன்று உங்கள் முன்னால் நான் பேசுகிறேன். அதேபோல, ஒரு நாள் தாயகம் திரும்பி அங்கு எங்களது மக்களுடன் இருந்து, அவர்களுக்கு பணி செய்வதற்கு காலம் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா.வும் நீதி வழங்கவில்லை.
தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமையாகும். இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது’ இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால், இந்த காணொலியில் பேசியது உண்மையிலேயே பிரபாகரன் மகள்தானா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.
இது துவாரகா அல்ல எனவும், செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“