மத்திய பிரதேசம் கோவிட் -19 2வது அலை மற்றும் கருப்பு பூஞ்சை தொடர்பான தொற்றுகளை எதிர்த்துப் போராடி வருகையில், போபால் எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கொரோனா தொற்று நுரையீரல் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் இந்திய பசுவின் கோமியம் குடிப்பதின் நன்மைகளை அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தடுக்க அரச மரம் மற்றும் துளசி போன்றவற்றை நடவு செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பிரக்யா தாக்கூர் ஞாயிற்றுக்கிழமை சாந்த் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, இந்த அறிக்கையை வெளியிட்டார். அங்கே அவர் 25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஹெட்கேவர் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், மோசமான மனநிலையுள்ளவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதாகவும், மரங்களை வெட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதுதான் இத்தகைய நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார். “நாம் வேம்பு, ஆலமரம், துளசி, அரச மரம் போன்ற மரங்களையும், 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை கொடுக்கும் பிற தாவரங்களையும் நட வேண்டும். இந்த மரங்களை நாம் நட்டிருந்தால், இன்று நாம் இந்த பிரச்சினைகளை சந்தித்திருக்க மாட்டோம். இன்றைய நிலைமைக்கு யாராவது பொறுப்பாளர்கள் என்று கூறினால் அது அத்தகையவர்களாக தான் இருக்கும்” என்று பிரக்யா சிங் தாகூர் கூறினார்.
மேலும், “மனந்திரும்புதல் என்ற முறையில், மரங்களை நடுவதற்கு உறுதியளிக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் 10 மரங்களை நட்டு அவற்றை வளர்த்து, அவைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும். நாம் அவைகளுக்கு உரம், தண்ணீர் கொடுத்து அவற்றை வளர்க்க வேண்டும். அவை நமக்கு திரும்ப உயிரைக் கொடுக்கும். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பீதி போன்ற நிலைமை இருக்காது” என்று பிரக்யா சிங் தாகூர் கூறினார்.
போபாலில் ஒரு கோடி மரங்களை நட்டு, அவைகளுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு தண்ணீர் டேங்கர்களை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். அவற்றை வளர்ப்பதை விட மரங்களை நடவு செய்வது எளிது என்று விளக்கினார்.
பின்னர், பிரக்யா சிங் தாக்கூர், ஒரு நாட்டு பசுவின் கோமியத்தை குடிப்பதன் நன்மைகளை விவரித்தார். “நாம் ஒரு நாட்டு பசுவின் கோமியத்தை குடித்தால், அது நம் நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோய்களைக் குணப்படுத்துகிறது. நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். ஆனால், நான் தினமும் கோமியம் குடிப்பேன். இதன் காரணமாக, நான் கொரோனாவுக்கு எந்த மருந்துகளையும் எடுக்க வேண்டியதில்லை. மேலும், கடவுளின் ஆசீர்வாதத்துடன் நான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. நான் சரியான வகையான மருந்துகளை (பசு கோமியம்) எடுத்துக்கொள்வதால் அது அப்படியே இருக்கும்.” என்று பிரக்யா சிங் தாக்கூர் கூறினார்.
பிரார்த்தனை செய்தபின் பசுவின் கோமியத்தை உட்கொள்வதாக அவர் விளக்கினார். “நீங்கள் எனக்கு அமிர்தத்தைப் போன்றவர்கள், நான் உன்னை நுகர்கிறேன். தயவுசெய்து என்னைப் பாதுகாக்கவும், ஏனென்றால் என் வாழ்க்கை தேசத்துக்கானது” என்று கூறினார்.
இந்த நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் தனது போபால் தொகுதியில் இருந்து கோவிட் நிவாரணத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். போபால் மத்தியப் பிரதேசத்தில் மிக அதிக தொற்றுகளைக்கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். கடந்த மாதம் போபாலில் பிரக்யா சிங் தாக்கூர் காணவில்லை என்று பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், அவர் தனது தொகுதியில் இல்லாதது குறித்து பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இருப்பினும், தனது அலுவலகத்திலிருந்து செயல்படும்போது தான் எல்லா உதவிகளையும் அளித்து வருவதாகவும், சமூக ஊடகங்களில் தனது பணியை விளம்பரப்படுத்தத் தவறியதே அவரது ஒரே தவறு என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“