Prajwal Revanna | Karnataka: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை ஜே.டி (எஸ்) சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Prajwal Revanna faces new case after woman alleges he raped and blackmailed her
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் சகோதரரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்போது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 47 வயதான பெண் ஒருவர், பிரஜ்வால் மற்றும் அவரது தந்தை மற்றும் ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ எச் டி ரேவண்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.இது தொடர்பாக ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹோலேநரசிபுரா நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகார் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
பிரஜ்வல் மீதான பாலியல் புகார்களின் அடிப்படையில், ஜே.டி(எஸ்) கட்சியில் இருந்து அவரை கடந்த செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்தது. இந்த விவகாரத்தில் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியது. அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரஜ்வால் சிறப்பு விசாரணைக்குழு முன் கடந்த வியாழக்கிழமைஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் முந்தைய புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தை எச்.டி ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வழக்கு
இந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகப் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக முன்னாள் மாவட்ட பெண் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் தன்னை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது தொடர்பான வீடியோவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (SIT) பதிவு செய்த நிலையில், கர்நாடகாவின் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மே 1 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அந்த எஃப்.ஐ.ஆரின் படி, 40 வயதுடைய அந்தப் பெண் தனது பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்துள்ளார். ஜனவரி 1, 2021 - ஏப்ரல் 25, 2024 இடைப்பட்ட காலத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண், அரசு நடத்தும் விடுதியில் மாணவிகளுக்கு சீட் கிடைக்க பிரஜ்வாலை சந்தித்ததாக கூறப்படுகிறது. “2021 ஆம் ஆண்டில், எம்.பி குடியிருப்பில் வேலைகளைச் செய்ய நான் பிரஜ்வல் ரேவண்ணாவைச் சந்தித்தேன். பல பெண்கள் அவருக்காகக் காத்திருக்கும் முதல் தளத்திற்குச் செல்லச் சொன்னார். தரைத்தளத்தில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு முதல் மாடிக்கு வந்து மற்ற பெண்களிடம் பேசினார். இறுதியாக, நான் மட்டுமே இருந்தேன், அவர் என்னை அறைக்குள் வரச் சொன்னார்.
அறையின் உள்ளே, என்னை கையால் இழுத்து கதவை மூடினார். நான் ஏன் கதவை மூடுகிறீர்கள் என்று கேட்டேன், அவர் என்னை படுக்கையில் உட்காரச் சொன்னார், மேலும் என் கணவர் அதிகமாக பேசுகிறார் என்று என்னிடம் கூறினார். எனது கணவரின் தலையீட்டால் அவரது தாயார் எம்.எல்.ஏ சீட்டை தவறவிட்டதாகவும் அவர் கூறினார். நான் அரசியலில் வளர வேண்டும் என்றால், அவரது வார்த்தைகளை கேட்க வேண்டும் என்றார்.
அப்போது, எனது ஆடைகளை கழற்றச் சொன்னார். நான் மறுத்தேன், உதவிக்காக கத்துவேன் என்று மிரட்டினேன். ஆனால், அவர் தான் துப்பாக்கி வைத்து இருப்பதாகவும், என் கணவரையும் என்னையும் விடமாட்டேன் என்றும் மிரட்டினார். பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு நான் ஆடைகளை கழற்றுவதை அவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இந்த சம்பவத்தை யாரிடமாவது வெளிப்படுத்தினால், வீடியோவை பொதுமக்களுக்கு வெளியிடுவேன் என்று மிரட்டினார். அந்த வீடியோக்களைப் பயன்படுத்தி, அவர் எனக்கு வீடியோ கால் செய்து, எனது ஆடைகளை கழற்றச் சொன்னார். என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். ”என்று அவர் புகாரில் குற்றம் சாட்டினார்.
தான் பயத்தின் காரணமாக இதுவரை புகார் செய்யவில்லை என்றும், பிரஜ்வாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், இப்போது புகார் அளிக்க முன்வர முடிவு செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.