/indian-express-tamil/media/media_files/9AZQ5ZbGZup9VDCGeIbL.jpg)
பாலியல் வழக்கு: வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுவதாக வீடியோ வெளியிட்டார் பிரஜ்வால் ரேவண்ணா.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை ஜே.டி (எஸ்) சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா (Prajwal Revanna). ஹாசன் தொகுதி எம்.பி.யான இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் சகோதரர் எச்.டி.ரேவண்ணாவின் (ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.) மகன் ஆவார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த வழக்கை தற்போது சிறப்பு விசாரணை குழுவால் (எஸ்.ஐ.டி) விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Will appear before SIT on May 31’: Prajwal Revanna on sex abuse allegations
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பூதாகாரமான நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஜெர்மனி தப்பிச்சென்றதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நான் தனிப்பட்ட முறையில் மே 31 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன். என் மீதான புகார்களுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தின் மூலம் வெளியே வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கடவுள், மக்கள் மற்றும் குடும்பத்தினர் என்னை ஆசீர்வதிக்கட்டும். நான் நிச்சயமாக மே 31, வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கவுடா கடந்த வாரம் தனது பேரன் "குற்றம் நிரூபிக்கப்பட்டால்" தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். குற்றச்சாட்டுகள் வெளிவந்தவுடன் ரேவண்ணாவிடமிருந்து குடும்பத்தினர் விலகினர்.
"கறைபடிந்த" எம்.பி மற்றும் அவரது கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், இந்தத் தேர்தலில் இந்த வழக்கு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. இந்த வீடியோக்கள் வெளிவருவதற்கு முன்பு ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியையும் எதிர்க்கட்சிகள் தாக்கி பேசின.
இந்த வழக்கை கண்டித்துள்ள மோடி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேற காங்கிரஸ் தலைமையிலான அரசு "அனுமதித்தது" என்று பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.