prakash javadekar about open letter celebrities narendra modi mob lynchings - 'மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு ஏதும் அரசு பதியவில்லை' - பிரகாஷ் ஜவடேகர்
இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர்.
Advertisment
இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர்.
சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதியது பரபரப்பாக பேசப்பட்டது.
Advertisment
Advertisements
"எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது, எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை, `ஆன்டி நேஷனல்’ (anti-national) என்றும், `அர்பன் நக்சல்’ (urban naxal) என்றும் முத்திரை குத்துவது நியாயமற்றது. இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. அதைச் செயல்படுத்தும் குரல்களில் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரலும் அடக்கம்.
ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிப்பது அல்லது எதிர்ப்பது என்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. எந்த ஆளும் கட்சியும் இந்திய அரசாகாது. எனவே, ஆட்சிக்கு எதிராகப் பேசுவது, நாட்டை எதிர்ப்பதாகாது. இத்தகைய விமர்சனங்களை, எதிர்ப்புகளை பொதுவெளியில் அனுமதிக்கும் நாடு மட்டுமே ஒரு வலுவான நாடாக இருக்க முடியும்" என்று பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும், சிறப்பாக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று கலந்து கொண்டார். அப்பொழுது அவர், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.