Advertisment

'முற்றிலும் போலி செய்தி': கேரள சி.பி.எம் தலைவர் பா.ஜ.க-வில் இணைவது பற்றி பிரகாஷ் ஜவடேகர் கருத்து

கேரள சி.பி.எம் தலைவர் ஜெயராஜன் பா.ஜ.க-வில் சேர இருப்பதாக வெளியாகிய தகவல் முற்றிலும் போலியானது என்று பா.ஜ.க மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Prakash Javadekar on meeting Kerala CPM leader Jayarajan Tamil News

சோபா சுரேந்திரனின் தகவலை "முற்றிலும் பொய்" என்று நிராகரித்த ஜெயராஜன், திருவனந்தபுரத்தில் பா.ஜ.க தலைவர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்ததை ஒப்புக்கொண்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala | Cpm | Bjp | Prakash Javadekar: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  (சி.பி.ஐ (எம்)) மத்தியக் குழு உறுப்பினராகவும், இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பா.ஜ.க சார்பில் கேரளாவின் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

Advertisment

ஜெயராஜன் பா.ஜ.க-வில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தனது கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து அந்த முடிவை வாபஸ் பெற்றதாகவும் ஷோபா சுரேந்திரன் தெரிவித்தார். இது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Prakash Javadekar on meeting Kerala CPM leader Jayarajan

இந்த நிலையில், ஜெயராஜன் பா.ஜ.க-வில் சேர இருப்பதாக வெளியாகிய தகவல் முற்றிலும் போலியானது என்று கேரளாவின் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே சுதாகரனை தாக்கியும் பேசிய அவர், “இது போலியான செய்தி. நான் யாரைச் சந்திக்கிறேன் அல்லது பேசுகிறேன் என்று சுதாகரனுக்கு எப்படித் தெரியும்?" என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஆலப்புழா பா.ஜ.க வேட்பாளர் சோபா சுரேந்திரன் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ஜெயராஜன் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை கூறினார். சில நாட்களுக்கு முன்பு, ஜெயராஜனுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் கூறினார். “ஜெயராஜனை சந்தித்தேன் என்று சோபா சொன்னாரா? நான் யாரைச் சந்திக்கிறேன் அல்லது பேசுகிறேன் என்று சோபாவுக்கு எப்படித் தெரியும்?" பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதேபோல், சோபா சுரேந்திரனின் தகவலை "முற்றிலும் பொய்" என்று நிராகரித்த ஜெயராஜன், திருவனந்தபுரத்தில் பா.ஜ.க தலைவர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்ததை ஒப்புக்கொண்டார். "நான் அவரை என் மகனின் வீட்டில் சந்தித்தேன். நான் அங்கு இருப்பதை உணர்ந்து ஜவடேகர் அங்கு வந்தார். நாங்கள் அரசியல் பற்றி பேசவில்லை. நான் ஒரு கூட்டத்திற்கு செல்ல விரும்பினேன், வீட்டை விட்டு வெளியேறும் முன், ஜாவடேகருக்கு டீ கொடுக்க என் மகனிடம் சொன்னேன். இந்த சந்திப்பு குறித்து கட்சிக்கு நான் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

எல்.டி.எஃப் கன்வீனரின் மகன் வீட்டில் தேநீர் அருந்திவிட்டு இந்த சந்திப்பு நடந்ததாக சோபா சுரேந்திரனின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, “நாங்கள் அவரது தொகுதியிலோ, விமான நிலையத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ சந்தித்திருக்கலாம். நான் நிறைய பேரை சந்திக்கிறேன். நான் சசி தரூர் அல்லது மற்ற அரசியல் தலைவர்களுடன் உணவு சாப்பிட்டிருக்கலாம். அது குற்றமா? அதிலென்ன பிழை இருக்கிறது?" என்று ஜெயராஜன் கேள்வி எழுப்பினார். 

இதற்கிடையில், கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று வெள்ளிக்கிழமை தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பை ஜெயராஜன் தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு முன்புகூட பல முறை ஜெயராஜன் இதுபோன்ற சிக்கலில் சிக்கியிருக்கிறார். பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பை தவிர்த்திருந்தால் ஜெயராஜனுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது" என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bjp Kerala Cpm Prakash Javadekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment