நடிகர் பிரகாஷ் ராஜ் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து, பிரதமர் மோடி இதுவரை கருத்து தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது. மோடி என்னை விட பெரிய நடிகராக இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், தி ஹிந்துவுக்கு பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், நான் மோடிக்கு எதிரானவன் அல்ல. நேர்மையாக இருப்பதற்கும், சுதந்திர நாட்டில் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குமான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “பிரதமரின் மவுனம் வேதனை அளிக்கிறது என்று கூறினேன். இதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்காக என்னை மோடிக்கு எதிரானவன் என்று கூற எவ்வளவு தைரியம் இருக்கக்கூடும்?
நான் மோடிக்கு எதிரானவன் அல்ல. அவர் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய பிரதமர். அவரை நான் அரசியல் கட்சிக்கான தலைவராகப் பார்க்கவில்லை. அவர் மதச்சார்பற்ற நாட்டின் தலைவர். பிரதமர் மோடி நம் நாட்டையும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவம் செய்கிறார். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில விஷயங்களில் அவருடன் எனக்கு முரண்பாடு உண்டு.
நேர்மையாக இருப்பதற்கும், சுதந்திர நாட்டில் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குமான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கண்டிப்பாக சமுதாயம் என் மேல் சுமத்திய பொறுப்புகளைப் புறந்தள்ளி விட்டு ஓடமாட்டேன்.
நான் சொல்லும் வார்த்தைகளுக்கு நானே பொறுப்பாளி. அதுதான் பிரகாஷ் ராஜின் அடையாளம். என்னைக் கேலி செய்பவர்கள் யாரும் என்னை முகத்துக்கு நேராகச் சந்திக்கும் வலிமை அற்றவர்கள். விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. தேவைப்படும் இடத்தில், நேரத்தில் நான் உண்மையையே பேசுவேன். என்னுடைய வார்த்தைகளில்தான் நான் நிற்கிறேன். அதில் மறுப்புக்கு இடமே இல்லை” என்றார்.
உங்களின் பேச்சை அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “நான் அரசியலுக்கு வர விருப்பப்பட்டால், நேரடியாக உங்களிடம் வந்து என்னுடைய நோக்கத்தைத் தெரிவிப்பேன். சமூகத்தில் பொறுப்புள்ள நடிகர்கள் கூறும் கருத்துகளைச் சரியாக புரிந்துகொள்ளும் அளவு மக்கள் இன்னும் வளர வேண்டும்” என்று கூறியுள்ளார்.