நான் வெறுப்புக்கு எதிராக வாக்களித்துள்ளேன், என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.88 கோடி வாக்களர்கள் வாக்களித்துள்ளனர்.
முதல்கட்டத் தேர்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசுரு, சாமராஜ் நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு அவர் பேசியதாவது “ எனது வாக்கு என்பது எனது உரிமை. எனது குரலை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வேட்பாளரை நான் தேர்வு செய்வேன். நான் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக, சட்டங்களை உருவாக்கும் நபரை நாம் தேர்வு செய்ய வேண்டும். நான் நம்பும் வேட்பாளருக்குத்தான் இன்று வாக்களித்துள்ளேன். அவர்கள் கொண்டு வந்திருக்கும் தேர்தல் அறிக்கை மாற்றத்தை கொண்டு வரும். கடந்த 10 ஆண்டு காலமாக வெறுப்பு பிரச்சாரம், பிரித்து ஆழும் அரசியல் நடைபெற்று வருகிறது. மாற்றத்தை வேண்டி நான் வாக்களித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களித்த பின்பு அவர் காரில் அமர்ந்து பேசியதில் “ ஹாய், மக்களே நான் வாக்களித்துவிட்டேன். நான் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளேன். நான் வெறுப்பு எதிராக வாக்களித்துள்ளேன். நாடாளுமன்றத்தில் எனது குரலை பிரதிபளிக்கும் , நான் நம்பிக்கை வைத்துள்ள வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன். தயவு செய்து அனைவரும் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.