தன்னையும், தனது குடும்பத்தினரையும் கேலி செய்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "கலாச்சாரமற்ற" பிராமணர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச் டி குமாரசாமி கடுமையாக சாடினார்.
சனிக்கிழமையன்று மாநில பாஜகவின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜோஷி, வரும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு குமாரசாமி தற்போது மேற்கொண்டு வரும் பஞ்சரத்ன யாத்திரை குறித்து கருத்து தெரிவித்தார்.
குமாரசாமியின் தந்தையான முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ கவுடாவின் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து பேசிய அமைச்சர், அதற்கு ஏன் பஞ்சரத்ன யாத்திரை என பெயரிட்டார்கள் என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏனெனில், தேவகவுடா, அவரது இரண்டு பிள்ளைகள், அவர்களது மனைவிகள், அவர்களது இரண்டு குழந்தைகள்... என மொத்தம் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு நவக்கிரக யாத்திரை என்று தான் பெயரிட்டிருக்க வேண்டும் என்றார்.
மேலும் ஹாசன் சட்டமன்றத் தொகுதி தொடர்பாக கவுடா குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து ஜோஷி கூறுகையில், கட்சியின் தலைமைதான் சீட் குறித்து முடிவு செய்யும் என்றார்கள். ஆனால் மேலிடம் எங்கே? அவர்களே மேலிடம், அவர்கள்தான் சண்டையும் போடுகிறார்கள், ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் அவர்களால் ஒன்றாக வாழ முடியாது என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை குமாரசாமி, மத்திய அமைச்சரை கடுமையாக சாடினார், தேர்தல் முடிந்ததும் ஜோஷியை முதல்வராக்க ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சி செய்கிறது. தென்னிந்திய பிராமண மரபுகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்தாததே அதற்குக் காரணம். பிராமணர்களில் இரண்டு முதல் மூன்று வெவ்வேறு பிரிவினர் உள்ளனர். இதில் ஜோஷி, சிருங்கேரி மடத்தில் சிலையை அழித்த பேஷ்வா சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் மகாத்மா காந்தியைக் கொன்ற குழுவைச் சேர்ந்தவர். அவர் பழைய கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த பிராமணர் அல்ல. அவரை அடுத்த முதல்வராக்க ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதனால் எங்களை தாக்க ஆரம்பித்துள்ளார், என்றார்.
ஜோஷி, தேசாஸ்தா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், அது கர்நாடகவில் இருந்து வந்தது அல்ல. அவர் மகாராஷ்டிராவின் பேஷ்வா சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்கள் கலாச்சாரமற்றவர்கள், அவர்களுக்கு கலாச்சாரம் தேவையில்லை.
தேசாஸ்தா பிராமண சமூகம், ’அனைவரும் நலமாக இருக்கட்டும்’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட பழைய கர்நாடகப் பகுதியின் பிராமண சமூகங்களைப் போலல்லாமல் இருந்தது.
இந்தச் சமூகம் தேசத்தைப் பிளவுபடுத்தவும், சதி அரசியலில் ஈடுபடவும், தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களை ஒழிக்கவும் மட்டுமே விரும்புகிறது. எனவே வீரசைவர்கள் (லிங்காயத்துகள்), வொக்கலிகர்கள், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (ஓபிசி) மற்றும் தலித்துகள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் சூழ்ச்சிக்கு விழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவரைப் போன்ற ஒருவரை முதல்வராக்கி மாநிலத்தைப் பிரிப்பார்கள். அவருக்கு கீழ் எட்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள். இதற்கான கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர்களால் ஏற்கனவே நடத்தப்பட்டது என்று குமாரசாமி மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.