மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றுக் கொண்டார் .
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா மாநில முதல்வராகவும் இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஒரு வருட காலமாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர், தொடர்ந்து தனது பணிகளை கவனித்து வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மனோகர் பாரிக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று (மார்ச்.18) அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பிரமோத் சாவந்த் பதவியேற்பு
இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து நிதின் கட்காரி தலைமையில், கூட்டணி கட்சிகளை கன்வின்ஸ் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மறுபக்கம், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வந்தது. இறுதியில், சபாநாயகர் பிரமோத் சாவந்த், புதிய முதலமைச்சராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு 11 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் மிருதுளா சின்ஹா, பிரமோத் சாவந்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜக கூட்டணியில் உள்ள கோவா ஃபார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் மற்றும் மஹாராஷ்ட்ரவதி கோமன்டாக் கட்சியின் சுதின் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சுயேட்சை கட்சிகளைச் சேர்ந்த இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
ஆயுர்வேதா ஆசிரியரான பிரமோத் சாவந்த், சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ்-ல் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றியவர். மறைந்த மனோகர் பாரிக்கரின் நம்பிக்கைக்குரியவர். உடல் நலம் குன்றியிருந்த போது, அரசுப் பணிகளை பிரமோத்திடம் வழங்கினார் மனோகர் பாரிக்கர். அந்தளவிற்கு பிரமோத் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்ததால், அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வராக பிரமோத் சாவந்த் முதல்வராக முன்மொழியப்பட்டார்.