Advertisment

ஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி உணர்த்தியது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்

பிரணாப் முகர்ஜியின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி பங்கேற்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
Jun 08, 2018 09:50 IST
ஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி உணர்த்தியது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி உணர்த்தியது மகிழ்ச்சி என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கருத்து கூறியிருக்கிறார்.

Advertisment

ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திற்கு நேற்று (ஜூன் 7) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்றார். பழுத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி, பாஜக அலுவலகத்திற்கு போயிருந்தால்கூட காங்கிரஸ் பதறியிருக்காது. ஆனால் சித்தாந்த ரீதியாக எதிர் முனையில் இருப்பதாக காங்கிரஸ் கருதும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அவர் செல்ல ஒப்புக்கொண்டதை பலரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தாவே, ‘நீங்கள் அங்கு பேசியதை மறந்து விடுவார்கள். ஆனால் அங்கு எடுக்கப்படும் படங்கள்தான் மக்கள் மனதில் நிற்கும்’ என தனது தந்தையை எச்சரித்தார். இதையும் மீறி பிரணாப் முகர்ஜி அங்கு சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர், ‘கலாச்சாரம், மொழி, நம்பிக்கை ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் இந்தியாவின் சிறப்பு! சகிப்புத் தன்மையில் இருந்துதான் நாம் பலம் பெறுகிறோம். பன்முகத் தன்மை மற்றும் சகிப்புத் தன்மையில்தான் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது.’ என குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பிறந்த இடத்திற்கு சென்ற பிரணாப் முகர்ஜி அங்கிருந்த குறிப்பு புத்தகத்தில், ‘இந்தியத் தாயின் சிறந்த மகன்’ என குறிப்பிட்டார்.

பிரணாப் முகர்ஜியின் ஆர்.எஸ்.எஸ். அலுவலக விசிட் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ‘காங்கிரஸ் கொள்கை எந்த அளவுக்கு சரியானது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பிரணாப் முகர்ஜி எடுத்துக் கூறியதில் மகிழ்ச்சி. இதன் மூலமாக தனது பாணியில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறானது என்பதையும் அவர் உணர்த்திவிட்டார்’ என குறிப்பிட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா இதிலிருந்து மாறுபட்ட கருத்தை நேற்று ட்விட்டரில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனந்த சர்மா கூறுகையில், ‘கேட்டு, புரிந்து, தங்களை மாற்றிக்கொள்ள முடிகிறவர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ஆலோசனை கூற எதுவும் இல்லை. ஏனெனில் பிரணாப்பின் கொள்கைக்கு முற்றிலும் மாறான கொள்கைகளை வைத்து அதை நியாயப்படுத்தும் அமைப்பு அது’ என குறிப்பிட்டார் ஆனந்த் சர்மா.

பிரணாப் முகர்ஜியின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி பங்கேற்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது.

 

#Pranab Mukherjee #Rss #P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment