ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி: ஜூன் 7-ம் தேதி பேசவிருப்பதால் பரபரப்பு

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டிருப்பது இந்த தேசத்திற்கு ஒரு செய்தியை சமர்ப்பிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேச இருக்கிறார். ஜூன் 7-ம் தேதி நாக்பூரில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ‘ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்’ அமைப்பு, பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் அந்தக் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் பலரும் பாஜக.வை விமர்சிக்கிற வேளைகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பற்றியே குறை கூறுவதுண்டு. இந்தப் பின்னணியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றிய சீனியர் காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது ஆச்சர்யமானது!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்தில் அந்தக் கூட்டம் நடக்கிறது. முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் இன்னும் இதை உறுதி செய்யவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தரப்பில் இந்தத் தகவலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் உறுதி செய்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘சங்க சிக்‌ஷா வர்கா’ நிகழ்வின் 3-ம் ஆண்டு கூட்டம் ஜூன் 7-ம் தேதி நாக்பூர் தலைமையகத்தில் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 600 ஊழியர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இதில் கலந்துகொண்டு பேச முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அழைத்தோம். அவரும் ஒப்புக்கொண்டார்’ என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்கா இது குறித்து கூறுகையில், ‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டிருப்பது இந்த தேசத்திற்கு ஒரு செய்தியை சமர்ப்பிக்கிறது. அதாவது, முக்கியப் பிரச்னைகளை சந்தித்து பேச முடியாத அளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் எதிரியல்ல. அவரது வருகை ஒப்புதல் மூலமாக ஆர்.எஸ்.எஸ்.-இந்துத்வா குறித்து கேள்வி எழுப்புகிறவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது’ என்றார் அவர்.

82 வயதான பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு ஜூலையில் ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பதவி ஏற்கும் முன்பு மன்மோகன்சிங் தலைமையிலான யுபிஏ-2 அரசில் நிதி அமைச்சராக அவர் பணியாற்றினார். காங்கிரஸுடன் ஒன்றி வளர்ந்த முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசவிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close