மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆபத்தான நிலையில், சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) ஆதரவில் இருக்கிறார் என்று ராணுவ (ஆர்&ஆர்) மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி 12:07 மணியளவில் தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட பெரிய ரத்தக்கசிவு காரணமாக,உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பின், தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) ஆதரவு வழங்கப்பட்டது. இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பெருந்தொற்றும் உறுதி செய்யப்பட்டது,” என்று மருத்துவமனையின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் நடந்த மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
திங்களன்று, பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டரில், " கொரோனா தொடர்பில்லாத தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக இன்று மருத்துவமனைக்குச் சென்றபோது கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில்,எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து தங்களை சுய தனிமைப்படுத்தல் மேற்கொள்ளுங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள நான் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியுடன் தொடர்புகொண்டு, முகர்ஜியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாக ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil