முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. 1954-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள்.
முதன்முதலாக 1954ம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி பாரத ரத்னா விருதை பெற்றார். அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.
1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலர் நனாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.