/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-26T101654.696.jpg)
Ananthakrishnan G
கோர்ட் அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மன்னிப்பு கேட்காத நிகழ்வு, தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளை வேதனைப்படுத்துவதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கான தண்டனை குறித்து அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் மன்னிப்பு கேட்கவே முடியாது என திட்டவட்டமாக பிரசாந்த் பூஷன் கூறியிருக்கிறார். மேலும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றமே கடைசி புகலிடம் என்றும் மன்னிப்பு கேட்பதிலும் கூட ஒரு நேர்மையான முறை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்தான் கூறியிருக்கிறது எனவும் பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? மன்னிப்பு கேட்பது என்ன பாவ காரியமா? அது குற்ற உணர்வின் பிரதிபலிப்பாகாதா? மன்னிப்பு என்பது ஆற்றுப்படுத்தும் ஒரு மந்திரச் சொல். மன்னிப்புக் கேட்டால் மகாத்மா காந்தி நிலைக்குச் செல்வீர்கள்” என்று நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார்.
நீதிபதி கவாய் கூறும்போது, “மகாத்மா காந்தி பிறரது தவறுகளுக்காக உண்ணா விரதம் இருப்பார். அவருக்காக அல்ல” என்றார். ஆனால் இன்னொரு நீதிபதியான கிருஷ்ணா முராரி அமர்வு முழுவதும் அமைதி காத்தார்.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அளிக்க வேண்டாம், இதன் மூலம் கோர்ட் தன் மகத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு, என்றார்.
பூஷணின் வழக்கறிஞர் ராஜிவ் தவான், பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அளிப்பதன் மூலம் அவரை தியாகி ஆக்காதீர்கள். இப்போதைய தேவை நீதி ராஜதந்திரமே தவிர கருணையல்ல.. என்றார்.
பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 அறிக்கைகளிலும் அவர் மன்னிப்புக் கேட்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிரசாந்த் பூஷன் கோர்ட்டில் சமர்ப்பித்த 2வது அறிக்கையைப் பார்த்த நீதிபதி அருண் மிஸ்ரா, “நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒன்றை பூஷனிடமிருந்து எதிர்பார்த்தோம்” என்றார். அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், பூஷனை எச்சரித்து விடுங்கள் அதுதான் நல்லது என்றார்.
“பதவியிலிருக்கும் போதும், ஓய்வு பெற்ற பிறகும் சில நீதிபதிகள் நீதித்துறையைப்பற்றி விமர்சனம் செய்துள்ளனர். இது நீதித்துறை தனக்குள்ளேயே ஆத்ம பரிசோதனை மேற்கொண்டு சீர்த்திருத்தம் அடைய வேண்டும் என்பதற்காகவே, நீதியின் மேம்பாட்டுக்காக இது கூறப்படுகிறது. ஆகவே பூஷணை தண்டிக்கக் கூடாது” என்று நீதிபதிகள் ஆலோசனை கேட்ட போது கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
பூஷனின் வழக்கறிஞர் தவான் கூறுகையில், “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் என்னவாயிற்று பாருங்கள்? கல்யாண் சிங்கை தியாகியாகவே பார்த்தனர். பூஷன் தியாகி என்ற அடைமொழியைக் கோரவில்லை. இந்த வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்பதோடு இந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
இதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, “இந்தத் தவறை (நீதித்துறை மீது ஊழல் புகார் சுமத்துவது) அவர் எதிர்காலத்தில் செய்யக் கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்க முடியும், ஆனால் தவறு செய்ததாக அவருக்கு உறுத்தல் கூட இல்லையே” என்றார்.
இதற்குப் பதில் அளித்த பூஷனின் வழக்கறிஞர் தவான், “இரண்டு தொப்பிகளை நான் அணிந்துள்ளேன், ஒன்று பூஷணின் வழக்கறிஞர் என்ற தொப்பி, இன்னொன்று நீதிமன்ற அதிகாரி என்ற தொப்பி. இதில் முதல் தொப்பியை அணியும் போது, பூஷனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர்ட் கோருவது பலவந்தமானது. நிறைய பொதுநலப் பணிகள் செய்துள்ள மூத்த வழக்கறிஞருக்கு எதிரானது. கோர்ட்டின் அதிகாரி என்ற 2வது தொப்பியை அணிந்து பார்க்கும் போது விமர்சனம் இல்லையென்றால் நீதி ஸ்தாபனம் வீழ்ந்துவிடும். தீவிர விமர்சனத்தை இது தாங்காது என்றால் வலுவான விமர்சனம் மூலமே நீதிமன்றம் நிலைக்கும்.
நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? உண்மையே அவருடைய தற்காப்பாக இருக்கும் போது அவர் நம்பிக்கைக்குரிய ஒன்றை கூறும் உரிமை அவருக்கு இல்லையா? இது அவரை நிரந்தர மவுனத்துக்குள் தள்ளுவதாகும். இல்லை, அவர் எப்போதும் விமர்சனம் செய்வார். நீதிமன்றத்தின் மிகப்பெரிய விமர்சகராக இருந்தவர் ஹெச்.எம்.சீர்வை, அவரை இனி செய்யாதே என்றால் அவர் என்ன கூறுவார் தெரியுமா? நான் மீண்டும் விமர்சிப்பேன் என்பார்.” என்றார்.
இதனையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா, பூஷணுக்கான பொருத்தமான தண்டனை என்ன என்று கேட்டார். கோர்ட் அவமதிப்பு என்பது முரண்பாடான ஒரு விஷயம். பூஷணை எச்சரிக்கவும் கூட இடமில்லை, உங்களிடமிருந்து ஒரு பொதுவான அறிக்கை மட்டும் போதுமானது, எச்சரிக்கையெல்லாம் தேவையில்லை, என்றார் தவண். கோர்ட் தனது அறிவுரையில், ‘கட்டுப்பாடு அவசியம்’ என்பதை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்றார் தவான்.
இதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் மோதல் ஏற்பட்டால் இந்த நீதித்துறை மீது யாருக்குத்தான் நம்பிக்கை வரும்? நீதிபதிகள் தங்கள் தரப்பு நியாயத்திற்காக ஊடகங்களிடம் செல்லக் கூடாது. வழக்கறிஞர்களான நீங்கள்தான் எங்கள் குரல், விமர்சனம் செய்யுங்கள், ஆனால் அதற்காக எங்கள் மீது நோக்கம் கற்பிக்காதீர்கள்” என்றார். இவர் செப்.2ம் தேதி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.