பீகாரில் அரசியலில் தனது கால் தடத்தை பதிக்க முயற்சிக்கும் ஒரு வெற்றிகரமான தேர்தல் வியூகவாதியாக, பிரசாந்த் கிஷோர் வெள்ளிக்கிழமை அவரது நோக்கத்தை வெளிபடுத்தியுள்ளார், அவர் மாநிலத்தில் நடந்து வரும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு “சாதி வெறியை” தூண்டுவதைத் தவிர “எந்த நோக்கத்திற்கும் உதவாது” என்று கண்டனம் செய்தார்.
ஜாதிக்கு அப்பாற்பட்டு அரசியலுக்காக உழைக்கப் போவதாகக் கூறும் பிராமணரான பிரசாந்த் கிஷோர், ஆர்.ஜே.டி ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பீகார் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று விமர்சித்தார். இரண்டு ராஜபுத்திர இளைஞர்களை அடித்துக் கொன்றதாக ஓ.பி.சி யாதவ் தலைவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட ’சரண்’ சம்பவம் தொடர்பாக இந்த விமர்சனம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் சாதிக் கோணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்ட அனுமதி; கேரளாவுக்கு அடிக்கிறது ஜாக்பாட்
பீகார் முழுவதும் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் பிரசாந்த கிஷோர் இதைச் சொன்ன உடனேயே, ஆர்.ஜே.டி தரப்பிலிருந்து ஒரு கவுண்டர் வந்தது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், கட்சியின் மாதேபுரா எம்.எல்.ஏ.வும், கல்வி அமைச்சருமான சந்திர சேகர், “நாங்கள் ஏகலைவர்கள், இனி நாங்கள் கட்டைவிரலை வழங்க போவதில்லை. தேவைப்பட்டால் மற்றவர்களின் கட்டைவிரல்களை எடுப்போம்,” என்று கூறினார்.
மகாபாரதத்தில் ஏகலைவன் கீழ்சாதியைச் சேர்ந்தவர் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது, குரு துரோணாச்சாரியார் அவரது சத்ரிய சீடன் அர்ஜுனனுக்கு வில் மற்றும் அம்பு திறன்களில் யாரும் போட்டியாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏகலைவனின் கட்டைவிரலைக் கேட்டார்.
பீகார் அரசியலில் உயர்சாதி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சந்திர சேகர் ஆர்.ஜே.டி சார்பாக, பிரசாந்த் கிஷோரை எதிர்த்தது சுவாரஸ்யமானது. சந்திர சேகர் சமீபத்தில் ராம்சரித்மனாஸ் குறித்து கருத்து தெரிவித்திருந்தார், அதன் சில பகுதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பெண்களை “இழிவுப்படுத்துவதாக” குறிப்பிட்டார். இது இப்போது அண்டை மாநிலமான உ.பி.யில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜன் சுராஜ் பிரச்சாரத்தின் போது சிவனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த நோக்கத்திற்காக உதவும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? எல்லாவற்றிற்கும் மேலாக, பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் ஏற்கனவே கணக்கிடப்பட்டு வருகின்றனர். அவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதா? சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நூலகத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் எந்தப் புத்தகத்தையும் படிக்காமல், ஐன்ஸ்டீன் ஆகலாம் என்று நினைப்பது போன்றது,” என்று கூறினார்.
ஆர்.ஜே.டி, ஜே.டி.(யு) மற்றும் காங்கிரஸின் மகாகத்பந்தன் அரசாங்கம் கவர முயற்சிப்பதாகத் தோன்றும் ஓ.பி.சி.,க்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம்கள் ஏற்கனவே முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாக்களித்துள்ளனர் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். “சாதிக் கணக்கெடுப்பு சாதி வெறியை மட்டுமே அதிகரிக்கும்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
ஆர்.ஜே.டியை தாக்கி பிரசாந்த் கிஷோர் மேலும் கூறியதாவது: “ஆர்.ஜே.டி கட்சி அரசாங்கத்தில் இருக்கும்போதோ அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்போதோ சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் அபாயம் உள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆர்.ஜே.டி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. மோசமான ஆட்சி ஆர்.ஜே.டி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்,” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகர், “நான் (ராம்சரித்மனாஸ்) ஒன்றிரண்டு விஷயங்களை மட்டுமே கூறியிருந்தேன், அது சர்ச்சையை உருவாக்கியது. நாங்கள் இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்பவர்கள் அல்ல. நாங்கள் ஏகலைவர்கள், நாங்கள் இனி கட்டைவிரலை வழங்கப் போவதில்லை, ஆனால் தேவைப்பட்டால் மற்றவர்களின் கட்டைவிரலை எடுக்க முடியும்,” என்று கூறினார்.
பீகார் மாநிலத்தில் உள்ள OBC களின் எண்ணிக்கையை சரியாக தீர்மானிக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்றும், இது நலத்திட்டங்களை மிகவும் திறம்பட திட்டமிட உதவும் என்றும் பீகார் அரசு வாதிட்டது. தேசிய அளவில் இதே கோரிக்கையை மத்திய அரசு எதிர்த்த நிலையில், பீகாரில் இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பா.ஜ.க ஆதரவு அளித்துள்ளது.
இருப்பினும், உயர் சாதி வாக்கு வங்கியில் ஏற்படும் வீழ்ச்சி குறித்து பா.ஜ.க எச்சரிக்கையாகவே உள்ளது. உதாரணமாக, பா.ஜ.க சரண் தொகுதி எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி, சரண் கொலைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், மேலும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பால் எழும் பதட்டங்களுடன் அதை இணைக்கவும் முயன்றார்.
பா.ஜ.க பீகார் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை கட்சி ஆதரிக்கும் அதே வேளையில், அதற்கான வடிவத்தை தயாரிப்பதற்கு முன்பு பீகார் அரசால் ஆலோசிக்கப்படவில்லை, என்று கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகும் என்பதால், பிப்ரவரி 25-ம் தேதி இந்த விவகாரம் அரசியல் சூடு பிடிக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் அன்று 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படும் ஒரே நேரத்தில் இரண்டு பொது நிகழ்வுகளை பீகார் காணும். அங்கு இந்த விவகாரங்கள் பேசப்படலாம்.
அதாவது பூர்னியாவில் மகாபந்தன் கூட்டுப் பேரணியை நடத்துகிறது, அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளின் தலைவரான சுவாமி சஹ்ஜானந்த் சரஸ்வதியை நினைவுகூரும் வகையில் பாட்னாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்.
பா.ஜ.க தனது “இந்துத்துவா பிளஸ் தேசியவாதம்” சுருதியில் தொடரும் நிலையில், “பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய” அரசியல் ஒரு பயனுள்ள எதிர்விளைவாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்று மகாகத்பந்தன் வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil