/indian-express-tamil/media/media_files/2025/10/28/prasanth-kishore-2025-10-28-12-47-59.jpg)
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர், தற்போது பிகார் சட்டமன்றத் தேர்தலில் அவரது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், அவர் இரு மாநிலங்களின் மேற்கு வங்கம் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில், பிரசாந்த் கிஷோரின் முகவரி, 121 காளிகாட் சாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முகவரிதான் பபானிபூர் தொகுதியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம். இது முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கிஷோர் திரிணாமூல் காங்கிரஸுடன் ஒரு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றி இருந்தார். காளிகாட் சாலையில் உள்ள செயின்ட் ஹெலன் பள்ளி அவரது வாக்குச்சாவடியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
பீகாரில், கிஷோர் சசாரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள கர்காஹர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான கோனாரில் உள்ள மத்திய வித்யாலயா, கோனார் அவரது வாக்குச்சாவடியாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிரிவு 17 கூறுவதாவது, "எந்தவொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய உரிமை இல்லை." மேலும், பிரிவு 18, ஒரு நபர் ஒரே தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படக்கூடாது என்று கூறுகிறது. ஒருமுறை பதிவு செய்தபின், வாக்காளர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுவதன் மூலம் பதிவை மாற்ற, படிவம் 8-ஐ பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
பிரசாந்த் கிஷோரிடம் கருத்து கேட்க தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை. ஆனால், அவரது அணியைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர், மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகுதான் கிஷோர் பிகாரில் வாக்காளராகப் பதிவு செய்ததாகக் கூறினார். மேலும், மேற்கு வங்க வாக்காளர் அட்டையை ரத்து செய்ய அவர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து விரிவாகக் கூறவில்லை என்றும் தெரிவித்தார். பிகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் சிங் குன்ஜியால் கருத்து தெரிவிக்கக் கோரிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
பல இடங்களில் வாக்காளர்கள் பதிவு செய்வது என்பது அபூர்வமான ஒன்றல்ல. உண்மையில், இந்த இரட்டைப் பதிவுகளைக் காரணம் காட்டியே, தேர்தல் ஆணையம் பிகாரில் தொடங்கி நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ள முடிவெடுத்தது. ஒரு இடத்தில் பதிவு செய்துவிட்டு, பிறகு வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்து, பழைய இடத்தில் பதிவை நீக்காமல் மீண்டும் புதிய இடத்தில் பதிவு செய்வது இரட்டைப் பதிவுக்கு வழிவகுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ. ஆர் பணியின்போது, மொத்தம் சுமார் 68.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் 7 லட்சம் பதிவுகள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்த வாக்காளர்களுடையது என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இன்னும் இரட்டைப் பதிவுகள் பட்டியலில் இருக்கக்கூடும் என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். காளிகாட் சாலையில் உள்ள டி.எம்.சி அலுவலகம் குறித்து, வார்டு எண் 73-இன் உள்ளூர் டி.எம்.சி கவுன்சிலரும், மம்தா பானர்ஜியின் சகோதரி மருமகளுமான கஜாரி பானர்ஜி கூறுகையில், "அவர் (கிஷோர்) திரிணமூல் காங்கிரஸுடன் பணிபுரிந்தபோது அந்த கட்டிடத்திற்கு வருவார், தங்குவார். அவர் இங்கிருந்து வாக்காளராகப் பதிவு செய்தாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பபானிபூரில் கிஷோர் வாக்காளராக இருப்பதற்கு சி.பி.ம் கட்சி ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. "கிஷோர் இங்கு வசிப்பவர் இல்லை, எனவே அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கடிதம் அளித்திருந்தோம்," என பபானிபூர்-2 பகுதிச் செயலாளரான பிஸ்வஜித் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us