Prashant Kishor roadmap report in hand, Sonia sets up action group for Congress revival: தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் காங்கிரஸிடம் அளித்த விளக்கத்தை ஆராய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்த குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, சோனியா காந்தி திங்கள்கிழமை மற்றொரு உள்ளகக் குழுவை அமைத்தார். இந்த அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு 2024 ஆனது கட்சி எதிர்கொள்ளும் அரசியல் சவால்களை தீர்க்க செயல்படும். இருப்பினும், குழுவின் அமைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம், மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர் என்ற அரசியல் பயிற்சி பட்டறையை நடத்த உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 காங்கிரஸ் தலைவர்கள் இந்த மூன்று நாள் அமர்வில் கலந்து கொள்கின்றனர்.
பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சியை ஆராய்ந்த எட்டு பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களை சோனியா காந்தி சந்தித்தார். ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, திக்விஜய சிங், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய குழு கடந்த வாரம் பலமுறை சந்தித்து பிரசாந்த் கிஷோரின் விளக்கத்தை ஆராய்ந்து அறிக்கையை தயார் செய்தது. கொள்கையளவில், பிரசாந்த் கிஷோர் அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை குழு ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு அல்லது 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) உடன் I-PAC நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்தது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், I-PAC அதன் எதிரணியான டிஆர்எஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் மூத்த தலைவர்கள் பலர் வருத்தமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இன்று, சோனியா காந்தி அந்த அறிக்கை குறித்து குழுவுடன் விவாதித்தார். விவாதங்களின் அடிப்படையில், வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள சோனியா காந்தி அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு 2024ஐ அமைக்க முடிவு செய்துள்ளார்,” என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
காங்கிரஸின் அரசியல் பயிற்சி பட்டறையில் விவாதங்களின் கவனம் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை மற்றும் அவை சமூகத்திற்கு முன்வைக்கும் சவால்கள் மீது இருக்கும் என்று சுர்ஜேவாலா கூறினார்.
மேலும், “விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓபிசிக்கள், மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் இளைஞர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்படும். மேலும், கட்சி மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான விஷயங்கள் ஆராயப்படும். 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் பரந்த வியூகம் குறித்தும் சிந்தன் ஷிவிரில் ஆலோசிக்கப்படும்” என்றும் சுர்ஜேவாலா கூறினார்.
இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வரைவதற்காக ஏற்கனவே 6 குழுக்களை கட்சி அமைத்துள்ளது. அரசியல் தீர்மானத்தை உருவாக்கும் குழு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இருக்கும் நிலையில், பொருளாதார நிலை குறித்த தீர்மானத்தை உருவாக்கும் குழு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும், விவாதத்துக்குத் தலைமை தாங்குவதற்கும் மற்றொரு குழுவுக்கு ஜி 23 அதிருப்தி குழுவின் உறுப்பினரான ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமை தாங்குவார். இந்த குழுவில் சத்தீஸ்கர் அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, சக்திசிங் கோஹில், நானா படோல், பர்தாப் சிங் பஜ்வா, அருண் யாதவ், அகிலேஷ் பிரசாத் சிங், கீதா கோரா மற்றும் அஜய் குமார் லல்லு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதையும் படியுங்கள்: வாஜ்பாய் முதல் மோடி வரை… மாறிவரும் இப்தார் விருந்து அரசியல்!
சிந்தன் ஷிவிரில் அரசியல் தீர்மானத்தை வரைந்து சமர்ப்பிக்கும் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையிலான குழுவில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் சவான், என் உத்தம் குமார் ரெட்டி, சசி தரூர், கௌரவ் கோகோய், சப்தகிரி சங்கர் உலகா, ராகினி நாயக் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சித்தராமையா, ஆனந்த் சர்மா, சச்சின் பைலட், மணீஷ் திவாரி, ராஜீவ் கவுடா, ப்ரணிதி ஷிண்டே, கௌரவ் வல்லப் மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
சல்மான் குர்ஷித் தலைமையில் "சமூகம் மற்றும் அதிகாரமளித்தல்" தொடர்பான பிரச்சினைகள் குறித்த அறிக்கையை உருவாக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களாக மீரா குமார், திக்விஜய சிங், குமாரி செல்ஜா, நபம் துகி, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, நரன்பாய் ரத்வா, ஆண்டோ ஆண்டனி மற்றும் கே ராஜு ஆகியோர் உள்ளனர்.
G 23 கடிதத்தில் கையொப்பமிட்ட மற்றொரு தலைவரான முகுல் வாஸ்னிக் தலைமையில் கட்சி அமைப்பு தொடர்பான விஷயங்களுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், அஜய் மக்கான், தாரிக் அன்வர், ரமேஷ் சென்னிதலா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நெட்டா டிசோசா மற்றும் மீனாட்சி நடராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தலைமையில் இளைஞர்கள் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.