இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் குறித்து திட்டங்கள் தயாரிப்பது, வெற்றியின் பாதையில் தேர்தல்களை நடத்த உதவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
பாஜகவிற்காக உழைத்த பிரசாந்த் கிஷோர்
2012ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவதற்காக உழைத்தார் பிரசாந்த் 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் சமயத்தில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் யூகங்களை வகுத்துக் கொடுத்தார் நிதிஷ் குமார்.
2015ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய கிஷோர் பிகார் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக திட்டங்களை தீட்டிக் கொடுத்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார், பிரசாந்திற்கு ஒரு அமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்த்தை அளித்து வந்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கடந்த வருடம் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வியூக நிபுணராக தொடர விருப்பம் இல்லை
கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிலையத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் “இனி மேல் எந்த கட்சிக்காகவும் வியூகம் அமைத்துத் தரமாட்டேன் என்றும் குஜராத் அல்லது பிகாருக்கே திரும்பி செல்ல விரும்புவதாக கூறினார்.
தேர்தலுக்கு வியூகம் மற்றும் திட்டங்கள் வகுத்துத் தரும் அவருடைய நிறுவனமான இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி ( Indian Political Action Committee (IPAC)) நிறுவனத்தை நல்ல கைகளிடம் ஒப்படைத்துவிட்டு இந்த பொறுப்புகளில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.